ஆர்டிக் பகுதியில் அணுசக்தி ஏவுகணை சோதனை செய்த ரஷ்யா : நோர்வே வெளியிட்ட தகவல்
ரஷ்யா சமீபத்தில் வெற்றிகரமாகச் சோதனை செய்ததாக அறிவித்த, அணுசக்தி ஆற்றல் கொண்ட உலகின் மிகவும் ஆபத்தான ஏவுகணைகளில் ஒன்றான ‘புரவெஸ்ட்னிக்’ (Burevestnik), ஆர்க்டிக்கில் (Arctic) உள்ள நோவயா ஜெம்ல்யா (Novaya Zemlya) தீவுக்கூட்டத்திலிருந்து தான் ஏவப்பட்டது என்ற தகவலை அதன் அண்டை நாடான நோர்வே வெளியிட்டுள்ளது.
ரஷ்யாவின் இந்த நடவடிக்கை, வட துருவப் பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள பதற்றத்தை மேலும் தீவிரப்படுத்தியுள்ளது.
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், ‘புரவெஸ்ட்னிக்’ ஏவுகணை எந்த ஒரு பாதுகாப்பு அமைப்பையும் ஊடுருவக்கூடிய ‘வரம்பற்ற தாக்குதல் தூரம்’ கொண்டது என்று பெருமையாக அறிவித்தார். ஆனால், இந்த ஏவுகணை சோதனையின் உண்மையான இடம் குறித்து ரஷ்யா மௌனம் காத்தது.
நோர்வேயின் இராணுவ உளவுத்துறை (NIS) அளித்த உறுதிப்படுத்தப்பட்ட தகவலின்படி, இந்த சோதனையானது பரன்ட்ஸ் கடல் (Barents Sea) பகுதியில் உள்ள நோவயா ஜெம்ல்யா தீவுக்கூட்டத்தில் இருந்து மேற்கொள்ளப்பட்டுள்ளது.
நோவயா ஜெம்ல்யா என்பது ரஷ்யாவின் முக்கிய அணு ஆயுதச் சோதனைகள் நடைபெறும் ஒரு மூடிய இராணுவப் பகுதி ஆகும்.
இந்தப் பகுதியில் அணு ஆயுத சோதனை நடத்தப்பட்டதாக நோர்வேயின் உளவுத்துறை உறுதிப்படுத்தியிருப்பது, உலக அரங்கில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.





