உக்ரைனுடன் புதிய சுற்று அமைதிப் பேச்சுவார்த்தை நடத்த ரஷ்யா தயார் ; கிரெம்ளின்

ஐரோப்பிய ராணுவ கூட்டமைப்பான நேட்டோவில் சேர உக்ரைன் ஆர்வம் காட்டி வந்தநிலையில் அந்த நாடோடு ரஷியா அதிபர் புதின் போர் அறிவித்து தாக்குதல் நடத்தி வருகிறார். 3 ஆண்டுகளுக்கு மேலாக நீடித்து வரும் இந்த போரில் உக்ரைனுக்கு ஆதரவாக அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகள் நிதி கொடுத்தும், ஆயுதங்கள் வழங்குகின்றன.
ரஷியாவுக்கு ஆதரவாக வடகொரியா ஆட்களை அனுப்புகிறது. சீனா மறைமுகமாக உதவுவதாக கூறப்படுகிறது. இந்த போரில் பல்லாயிரக்கணக்கானவர்கள் உயிரிழந்து வருகின்றனர்.
இந்தநிலையில் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் தற்போது ரஷியாவை உடனடியாக போர் தாக்குதலை நிறுத்துமாறு அறிவுறுத்தியுள்ளார். இதற்காக 50 நாட்கள் கெடு விதித்துள்ளார். மேலும் அதனை மீறி போர் தாக்குதலை நீடித்தால் கடுமையான பொருளாதார தடைகளை சந்திக்க நேரிடும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதனிடையே ரஷியாவின் அதிகாரப்பூர்வ அரசு தலைமையிடமான கிரெம்ளின் மாளிகையின் செய்தி தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் பத்திரிகையாளர்களை சந்திந்தார். அப்போது அவர் உக்ரைனுடன் புதிய அமைதி பேச்சுவார்த்தைக்கு தயார் என அறிவித்தார்.
அவர் கூறுகையில், “உக்ரைனுடன் அமைதி பேச்சுவார்த்தைக்கு எப்போதும் நாங்கள் தயார். ஆனால் எங்களுடைய லட்சியங்கள் ஈடேறும்வரை போர் தாக்குதல் தொடரும். நேட்டோ கூட்டமைப்பில் உக்ரைன் சேருவதை தவிர்க்க வேண்டும். எல்லை மீறி ஆக்கிரமித்த பகுதிகளை சுதந்திரமாக அறிவிக்க வேண்டும். மேற்கத்திய நாடுகளுடனான தொடர்பை துண்டித்து ராணுவத்தை குறைத்தால் நாங்கள் புதிய அமைதி பேச்சுவார்த்தைக்கு இப்போதும் தயார்” என பேசினார்.