ரஷ்யா-வடகொரிய பாதுகாப்பு ஒப்பந்தம் உலகளாவிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ; அதிபர் யூன் சுக் இயோல்
ரஷ்யாவுக்கும் வடகொரியாவுக்கும் இடையிலான பாதுகாப்பு ஒப்பந்தம் உலகளாவிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்துகிறது எனத் தென்கொரிய அதிபர் யூன் சுக் இயோல் செவ்வாய்க்கிழமையன்று (அக்டோபர் 29) கூறினார்.
10,000 ராணுவ வீரர்களைப் பயிற்சி மேற்கொள்வதற்காக ரஷ்யாவிற்கு வடகொரியா அனுப்பியதாக அமெரிக்கா குற்றம் சாட்டியது. அதனையடுத்து, தென்கொரிய அதிபர் மேற்கூறியவாறு தெரிவித்தார்.மேலும், உக்ரேனுக்கும் ரஷ்யாவிற்கும் இடையில் நடந்துவரும் போர் மூன்றாவது ஆண்டாகத் தொடரும் நிலையில், ரஷ்யாவிற்கு ஆயுதங்கள் வழங்குவதையும் தாண்டி ராணுவ உதவிகளும் வட கொரியா செய்துவருவதாக யூன் குற்றம் சாட்டினார்.
சில நாள்களுக்குமுன், சிறப்புப் படைகள் உட்பட ஆயிரக்கணக்கான வீரர்களை ரஷ்யாவிற்கு வடகொரியா அனுப்பியுள்ளதாகத் தென்கொரிய உளவு நிறுவனம் கூறியது.
வடகொரியா, ரஷ்யா ஆகிய இரு நாடுகளுக்கும் இடையிலான பாதுகாப்பு ஒப்பந்தம் உலகளாவிய சட்டங்களுக்குப் புறம்பானது. மேலும், இந்த ஒப்பந்தம் அனைத்துலக சமூகத்தின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்துவதோடு தென்கொரியாவின் பாதுகாப்புக்கு ஆபத்து விளைவிக்கக்கூடும் எனத் தான் அஞ்சுவதாகத் யூன் கூறினார்.
“அனைத்து சாத்தியக்கூறுகளையும் முழுமையாக ஆராய்ந்து அதற்கு ஏற்றவாறு நடவடிக்கைகள் எடுக்கப்படும். ரஷ்யாவுக்கும் வடகொரியாவுக்கும் இடையில் இருக்கும் ராணுவ ஒப்பந்தத்தின் முன்னேற்றத்தைப் பொறுத்து நடவடிக்கைகள் படிப்படியாக மேற்கொள்ளப்படும்,” எனத் தென்கொரிய அதிபர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
வட கொரிய வெளியுறவு அமைச்சர் சோ சோன் ஹுய் மாஸ்கோவிற்குச் சென்றிருப்பதாக அந்நாட்டின் அதிகாரபூர்வ செய்தி நிறுவனம் அக்டோபர் 29ஆம் திகதி கூறியது.