விமான விபத்திற்கு ரஷ்யாவே காரணம் ; அஜர்பைஜான் அதிபர் இல்ஹாம் அலியேவ் குற்றச்சாட்டு
அஜா்பைஜான் ஏா்லைன்ஸுக்குச் சொந்தமான எம்ப்ரேயர் 190 என்ற விமானம் ஒன்று, 67 பேருடன் தலைநகா் பாக்குவில் இருந்து ரஷ்யாவுக்கு கடந்த 25ஆம் திகதி புறப்பட்டது. கஜகஸ்தானில் உள்ள அக்தெள நகர விமான நிலையம் அருகே அது பறந்துகொண்டிருந்தபோது அதை அவசரமாக தரையிறக்க விமானிகள் முயன்றனா். ஆனால், தரையிறங்குவதற்கு முன்னதாக அந்த விமானம் கட்டுப்பாட்டை இழந்து தரையில் மோதி வெடித்தது. இதில் 38 பேர் உயிரிழந்தனர். மற்ற 29 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டனர்.
பறவைகள் மோதியதால் விமானியின் கட்டுப்பாட்டை இழந்து இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று முதலில் கருதப்பட்டது. ஆனால், அதற்கான சாத்தியம் குறைவு என்பதால், வான் பாதுகாப்பு சிஸ்டம் அல்லது ஏவுகணை மூலம் தாக்குதல் நடத்தப்பட்டிருக்கலாம் எனக் கூறப்பட்டது. அதற்கான அடையாளங்கள் விமானத்தில் தென்பட்டதாக சந்தேகம் எழுப்பப்பட்டது.
இதில் ஏவுகணையை ஏவியிருக்கலாம் உக்ரைன், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் குற்றஞ்சாட்டின. இதற்கிடையே சில ரஷ்ய ஊடகங்கள் இதை ரஷ்யாவே தவறுதலாக செய்ததாக சுட்டிக்காட்டின.
இந்த நிலையில், அஜர்பைஜான் விமான விபத்துக்கு மன்னிப்பு கேட்பதாக ரஷ்ய அதிபர் புதின் தெரிவித்திருந்தார். தற்போதுவரை விசாரணை நடைபெற்று வரும் நிலையில், விமான விபத்துக்கு யாரும் பொறுப்பேற்கவில்லை. அதேநேரத்தில், உக்ரைன் ட்ரோன்களை தாக்குவதாக நினைத்து, ரஷ்யா தவறுதலாக இந்த விமானத் தாக்குதலை நடத்தியிருக்கலாம் என கூறப்படுகிறது. இதையடுத்தே ரஷ்யா மன்னிப்பு கோரியிருக்கலாம் எனக் கருதப்படுகிறது.
இந்த நிலையில், ரஷ்யாவே அந்த விமானத்தைச் சுட்டு வீழ்த்தியதாக, அஜர்பைஜான் அதிபர் இல்ஹாம் அலியேவ் தெரிவித்துள்ளார். ஆனால், ரஷ்யா வேண்டுமென்றே விமானத்தைச் சுட்டு வீழ்த்தியதாக நாங்கள் கூறவில்லை என்ற அவர், ரஷ்யா இந்த விவகாரத்தை மூடி மறைக்க முயன்றதாகவும் சாடியுள்ளார்.