வடகிழக்கு உக்ரைனில் தாக்குதலை தீவிரப்படுத்தும் ரஷ்யா – ஸெலன்ஸ்கி
ரஷ்யா, உக்ரைன் மீதான தாக்குதல்களைத் தீவிரப்படுத்தக்கூடும் என்று உக்ரேனிய அதிபர் வொலொடிமிர் ஸெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.
ரஷ்ய-உக்ரைன் போரில் விரைவில் தீர்வுகாணுமாறு மேற்கத்திய நாடுகள் கேட்டுக்கொண்டு வருகின்றன. ஆனால் ’நியாயமான அமைதி’யை மட்டுமே கியவ் ஏற்றுக்கொள்ளும் என்று செய்தி நிறுவனம் ஒன்றிற்கு அழித்த நேர்காணலில் ஸெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.
மேற்கத்திய நாடுகள் வழங்கும் ஆயுதங்களைக் கொண்டு உக்ரைன், ரஷ்யாவின் பகுதிகள் மீது தாக்குதல்கள் நடத்தத் தடை உள்ளது. அது ரஷ்யாவுக்கு ஆக அதிக சாதகமான காரணி என்றார் ஸெலென்ஸ்கி.
உக்ரேனிய படைகளிடையே உற்சாகம் குறைந்திருப்பது போன்ற பிரச்சினைகள் குறித்து ஸெலென்ஸ்கி பேசுகையில். போர் மூன்றாவது ஆண்டாகத் தொடரும் வேளையில் ரஷ்யாவுடன் ஒப்பிடுகையில் உக்ரைனிடம் போதுமான ஆயுதங்களும் ஆள்பலமும் இல்லாத நிலை உருவாகியுள்ளது.“எங்களுக்கு நியாயமான முறையில் அமைதி கிடைக்கும் விதத்தில் போர் முடியவேண்டும் என்பதே எங்களின் விருப்பம்,” என்று கூறிய ஸெலென்ஸ்கி, “மேற்கத்திய நாடுகளோ போர் முடிவதில்தான் அக்கறை கொண்டுள்ளன. அவ்வளவுதான். போர் விரைவில் முடிவுக்கு வரவேண்டும் என்பதே அவர்களின் விருப்பம். அவர்களுக்கு அதுவே நியாயமான அமைதியாகும்,” என்றும் எடுத்துரைத்தார்.
இந்நிலையில், ரஷ்யாவின் நான்கு ஊடகங்கள் செய்தி வெளியிடுவதை ஐரோப்பிய ஒன்றியம் தடை செய்ததை அந்நாட்டு நாடாளுமன்ற நாயகர் வியாச்செஸ்லாவ் வொலோடின் சனிக்கிழமையன்று (மே 18) சாடினார். இந்நடவடிக்கை, மேற்கத்திய நாடுகள் மாற்றுக் கருத்தை ஏற்க மறுப்பதையும் அவை பேச்சு சுதந்திரத்தை அழிப்பதையும் காட்டுவதாக அவர் குற்றஞ்சாட்டினார்.
வாய்ஸ் ஆஃப் யூரோப், ஆர்ஐஏ நொவொஸ்தி செய்தி நிறுவனம், இஸ்வெஸ்ட்டியா மற்றும் ரொசிய்ஸ்க்காயா கெஸெட்டா செய்தித்தாள்கள் ஆகியவை செய்தி வெளியிடுவதை தற்காலிகமாகத் தடை செய்யப்போவதாக வெள்ளிக்கிழமையன்று (மே 17) ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்தது. அந்த ஊடகங்கள், ரஷ்யா-உக்ரைன் போரில் ரஷ்யாவுக்கு ஆதரவளிக்கும் வகையில் செயல்படுவதே ஐரோப்பிய ஒன்றியத்தின் குற்றச்சாட்டாகும்.
இதனைத் தொடர்ந்து மாஸ்கோவில் இயங்கும் மேற்கத்திய ஊடகங்களுக்குக் கடுமையாக பதிலடி கொடுக்கப்படும் என்று ரஷ்யா கூறியுள்ளது. எந்த ஊடகங்கள் பாதிப்புக்கு உள்ளாகும் என்பது குறித்து அது தகவல் வெளியிடவில்லை.