ஆளில்லா விமானம் மூலம் ரஷ்யா தாக்குதல்… கீவில் உள்ள தொழிற்சாலை வளாகத்தில் தீ- பலர் காயம்
உக்ரைன்மீது ரஷ்யா புதன்கிழமை(ஜீன்12) அதிகாலை ஏவுகணை, ஆளில்லா வானூர்தி ஆகியவற்றின் மூலம் தாக்குதல்களை நடத்தியது. இத்தாக்குதலில் ஆறு வட்டாரங்களில் இருந்த குடியிருப்புகள் சேதமடைந்தன என்றும் தொழிற்சாலை வளாகம் ஒன்றில் தீவிபத்து ஏற்படுத்தியது என்றும் அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்தனர்.மேலும், இத்தாக்குதலால் பலர் காயமடைந்ததாகவும் அவர்கள் கூறினர்.
ரஷ்யா செவ்வாய்க்கிழமை இரவு நடத்திய தாக்குதலின் போது ஏவிய 6 ஏவுகணைகளில் ஐந்தையும் 24 வானூர்திகளையும் சுட்டு வீழ்த்தியதாக உக்ரைன் ராணுவம் தெரிவித்தது.தலைநகரை நெருங்கும் அனைத்து வான் ஆயுதங்களையும் உக்ரேன் வான் பாதுகாப்பு அமைப்புகள் அழித்துவிட்டன என்று கீவ் நகர ராணுவ நிர்வாகத்தின் தலைவர் செர்ஹி பாப்கோ டெலிகிராமில் தெரிவித்தார்.
ரஷ்ய தாக்குதலால் தொழிற்சாலை வளாகத்தில் மூண்டத் தீயை 105 பேர் தீயை அணைக்க 30 கருவிகளைப் பயன்படுத்தினர் என்று கீவ் வட்டார ஆளுநர் கூறினார்.இந்தத் தாக்குதலில் குடியிருப்பாளர் ஒருவர் காயமடைந்ததுடன் தனியார் குடியிருப்பு,மோட்டார் வாகனங்கள் பழுதுபார்க்கும் நிலையம், எரிவாயு நிலையம், சேமிப்பு கிடங்கு ஆகியவை சேதமடைந்ததாகவும் அவர் தெரிவித்தார்.
டினிப்ரோபெட்ரோவ்ஸ்க் வட்டாரத்தின்மீது ரஷ்யா நடத்திய தாக்குதலில் மூவர் காயமடைந்ததாகவும் ஒன்பது தனியார் குடியிருப்புகள் சேதமடைந்ததாகவும் அவ்வட்டார ஆளுநர் வெளியிட்ட அறிக்கையில் கூறினார்.வான்வழித் தாக்குதல் எச்சரிக்கைகள் உக்ரேன் முழுவதும் பல மணிநேரம் நீடித்தன. இந்த அனைத்து தகவல்களையும் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் வழங்கியது.
கடந்த மார்ச் மாத இறுதியில் உக்ரைனின் எரிசக்தி அமைப்பை ரஷ்யா தாக்கத் தொடங்கியதில் இருந்து அதன் உற்பத்தித் திறன் பாதிக்கப்பட்டது. இதனால், கீவ் வட்டாரத்தில் வாழும் மூன்று மில்லியன் மக்கள் பல இடையூறுகளை எதிர்கொள்கின்றனர். அவர்களின் அன்றாட வாழ்க்கையின் ஒரு பகுதியாக இப்பிரச்சினைகள் மாறி வருகிறது.
“தண்ணீர் பற்றாக்குறையே முக்கியப் பிரச்சினை,”என கீவில் வசிக்கும் 34 வயதான திரு வலேரி தகாலிச் ராய்ட்டர்சிடம் தெரிவித்தார்.“சமையலுக்காக, ஒரு சிறிய எரிவாயு அடுப்பை வாங்க வேண்டியிருந்தது. கைக்குழந்தையுடன் வசிக்கும் எங்களின் அன்றாட வாழ்கையை இது மிகவும் சிக்கலாக்குகிறது,” எனத் தகவல் தொடர்பு தயாரிப்பு மேலாளராக இருக்கும் அவர் கூறியதாக ராய்ட்டர்ஸ் கூறியது.
ரஷ்யப் படைகள் வெப்ப, நீர்மின் நிலையங்கள் மீது ஏவுகணை, ஆளில்லா வானூர்திகள் ஆகியவற்றின் மூலம் நடத்தும் தாக்குதல்களைத் தீவிரப்படுத்தி வருவதால் இப்பிரச்சினைகள் மோசமாகிவிடும் என எதிர்கொண்டு வரும் குளிர்காலத்தை நினைத்து பல உக்ரேனியர்கள் அஞ்சுகின்றனர்