அணுமின் நிலையத்தை தாக்க திட்டமிட்ட இரு உக்ரேனியர்களை கைது செய்த ரஷ்யா
அணுமின் நிலையத் தாக்குதலுக்குத் திட்டமிட்டதாகக் கூறப்படும் உக்ரேனியர்களை ரஷ்யா கைது செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
வியாழக்கிழமை (மே 25) நாட்டில் உள்ள அணுமின் நிலையங்களை குறிவைக்க திட்டமிட்டதாக இரு உக்ரைனியர்கள் கைது செய்யப்பட்டதாக ரஷ்யாவின் FSB பாதுகாப்பு சேவை தெரிவித்துள்ளன.FSB-ன் அறிக்கையில், உக்ரேனிய வெளிநாட்டு உளவுத்துறையின் நாசவேலை குழு மே மாத தொடக்கத்தில் லெனின்கிராட் மற்றும் கலினினில் உள்ள அணு உலைகளின் சுமார் 30 மின் இணைப்புகளை தகர்க்க முயன்றது என்றும்,ரஷ்யாவிற்கு கடுமையான பொருளாதார பாதிப்பை ஏற்படுத்தும், அதன் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் நோக்கத்தில் இத்தாக்குதல் திட்டமிடப்பட்டுள்ளது என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
உக்ரேனிய ஆட்கள், உயர் மின்னழுத்தக் கம்பியைச் சுமந்து செல்லும் ஒரு கோபுரத்தை வீழ்த்தியதாகவும், லெனின்கிராட் அணுமின் நிலையத்திலிருந்து உயர் மின்னழுத்தக் கம்பிகளைச் சுமந்து செல்லும் நான்கு மின்கம்பங்களில் கண்ணிவெடிகளை புதைத்து வைத்ததாகவும், கலினின் அணுசக்தி திட்டத்துடன் தொடர்புடைய இதேபோன்ற ஏழு மின்கம்பங்களுக்கு அருகில் வெடிபொருட்கள் புதைக்கப்பட்டதாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இந்த திட்டத்தில் தொடர்புடைய மூன்றாவது நபரைத் தேடிவருவதாக FSB தெரிவித்துள்ளது. சந்தேக நபர்கள் மற்றும் அவர்களது கூட்டாளிகள் என கூறப்படும் நபர்களின் வீடுகளில் 36.5 கிலோ வெடிபொருட்கள் மற்றும் சுமார் 60 டெட்டனேட்டர்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக பாதுகாப்பு சேவை மேலும் கூறியுள்ளது.
இந்த உக்ரேனியர்களுக்கு உதவிய இரண்டு ரஷ்யர்களும் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.