உக்ரைனின் தலைநகர் மீது ரஷ்யா சரமாரி தாக்குதல்: மூவர் உயிரிழப்பு
உக்ரைன் தலைநகர் கீவ் மீது ரஷ்யா நடத்திய சரமாரியாகத் தாக்குதலில் 3 பேர் கொல்லப்பட்டனர். மேற்கு லுட்ஸ்க், கிழக்கு டினிப்ரோ மற்றும் தெற்கு சபோரிஜியா பகுதிகளில் உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன.
ரஷ்யா – உக்ரைன் போர் கடந்த 2 ஆண்டுகளும் மேலாக நீடித்து வரும் நிலையில், சமீபத்தில் உக்ரைன் படைகள் ரஷ்ய பகுதிகளுக்குள் நுழைந்து தாக்குதல் நடத்தியன. இந்நிலையில், இன்று அதிகாலை உக்ரைன் தலைநகர் கீவ் மீது ரஷ்யா ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல் நடத்தியதில் 3 பேர் கொல்லப்பட்டனர். மேற்கு லுட்ஸ்க், கிழக்கு டினிப்ரோ மற்றும் தெற்கு சபோரிஜியா பகுதிகளில் உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன.
தலைநகர் கீவில் குண்டுவெடிப்புச் சத்தம் கேட்டதாகவும், இந்த தாக்குதலால் நகரில் மின்சாரம் மற்றும் தண்ணீர் விநியோகம் தடைபட்டுள்ளதாக கீவ் மேயர் விட்டலி கிளிட்ச்கோ தெரிவித்துள்ளார்.
உக்ரைன் சுதந்திர தினத்தையொட்டி (ஆக.24) , ரஷ்யா தாக்குதல் நடத்த அதிக வாய்ப்பு இருப்பதாக அமெரிக்க தூதரகம் கடந்த வாரம் எச்சரிக்கை விடுத்தது கவனிக்கத்தக்கது. ஞாயிற்றுக்கிழமை, ரஷ்யா உக்ரைன் மீது நடத்திய தாக்குதலில் நான்கு பேர் கொல்லப்பட்டனர். 37 பேர் காயமடைந்தனர் என்று உக்ரைனிய ராணுவம் மற்றும் உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.