மஹிந்தவின் தென்னந்தோப்புகளை பராமரிக்க இராணுவத்தை வழங்க முடியாது – ஆளும் கட்சி
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்புக்காக வழங்கப்பட்ட இராணுவத்தினர், மஹிந்த ராஜபக்ஷவின் தென்னந்தோட்டங்களை பாதுகாக்கவும் வீட்டுவேலைகளுக்குமே பயன்படுத்தப்பட்டார்கள் என்றும் இராணுவத்தினரை அவ்வாறு பயன்படுத்த ஒரு போதும் அனுமதிக்க முடியாது எனவும் ஆளும் கட்சி எம்.பிக்கள் நேற்று சபையில் வாதிட்டனர்.
முன்னாள் ஜனாதிபதி ராஜபக்ஷவின் பாதுகாப்பைக் குறைத்து டயஸ்போராக்களின் விருப்பத்திற்கிணங்க செயற்பட வேண்டாம் என்றும் பாதாளக் குழுக்களும் மஹிந்த ராஜபக்க்ஷவும் ஒன்றல்ல என்றும் பொதுஜன பெரமுன எம்.பி. சானக நேற்று சபையில் தெரிவித்த கூற்றுக்கு பதிலளிக்கும் வகையிலேயே, ஆளும் கட்சியினர் இவ்வாறு தெரிவித்தனர்.
பாராளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற பாடசாலை மாணவர்களுக்கான காகிதாதிகளுக்கான குறை நிரப்பு பிரேரணை மீதான விவாதத்தில் உரையாற்றிய பொதுஜன பெரமுன எம்.பி. சானக,முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கான பாதுகாப்பு குறைக்கப்பட்டுள்ளதாகவும் அவரின் பாதுகாப்பை நீக்கியுள்ள அரசு அவரது பாதுகாப்புக்கு இராணுவத்தை வழங்க முடியாது என தெரிவிக்கின்றது என்றும் குறிப்பிட்டார்.
நாட்டில் யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்தவர் மஹிந்த ராஜபக்க்ஷ. யுத்தம் நடந்தபோது ஐந்து நிமிடங்களுக்கு 30 கோடி ரூபா செலவானது.
இன்று அந்த நிலை இல்லை. என்றாலும் யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்து நாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்திய தலைவருக்கு அரசாங்கம் 30 கோடி ரூபா செலவிடமுடியாதா? என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.
பாதாள குழுத்தலைவர்களுக்கே பலர் பாதுகாப்பு வழங்கும் நிலையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு பாதுகாப்பு வழங்க முடியாதா? என்றும் மஹிந்த ராஜபக்ஷவை பாதாளக்குழுத் தலைவர்களுடன் ஒப்பிட வேண்டாம் என்றும் அவர் தெரிவித்தார்.
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு வழங்கும் பாதுகாப்பை மஹிந்த ராஜபக்ஷவுக்கும் வழங்குவதற்கு இருவரும் ஒன்றல்ல என்றும் அவர் தெரிவித்தார்.
அவரது அந்த கூற்றால் விசனமடைந்த தேசிய மக்கள் சக்தி எம்.பி.க்கள் இடையில் குறுக்கிட்டு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்புக்கு வழங்கப்பட்ட இராணுவத்தினர் மஹிந்த ராஜபக்ஷவின் தென்னந்தோட்டங்களை பாதுகாக்கத்தான் பயன்படுத்தப்பட்டார்கள்.
இராணுவத்தினரை அவ்வாறான வேலைகளுக்கு பயன்படுத்த அனுமதிக்க முடியாது என்று தெரிவித்தனர்.
இதன் காரணமாக சபையில் நேற்று சில நிமிடங்கள் இருதரப்புக்குமிடையில் கடும் தர்க்கம் ஏற்பட்டமை குறிப்பிடத்தக்கது.