உயிரைக்காக்க படகில் தத்தளித்த ரோஹிங்கியா முஸ்லீம் அகதிகள்; விரட்டியடித்த இந்தோனேஷியா
வங்கதேச முகாமில் இருந்து படகுமூலம் தப்பித்து, இந்தோனேஷியாவிற்கு செல்ல முயன்ற ரோஹிங்கியா முஸ்லிம்கள், போர்க்கப்பல் மூலம் விரட்டியடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வங்கதேசத்தில் பிற்படுத்தப்பட்ட சமூகத்தினராக கருதப்படும் ரோஹிங்கியா முஸ்லிம்கள், அந்நாட்டின் ராணுவத்தால் அடக்குமுறைக்கு உள்ளாக்கப்பட்டு வருகின்றனர். ரோஹிங்கியா முஸ்லிம்களை குறிவைத்து தொடர் தாக்குதல்கள் நடைபெற்று வருவதால் உள்நாட்டிலேயே பலர் அகதிகளாக மாறியுள்ளனர். பலர் சட்டவிரோதமாக படகுகள் மூலம் ஆபத்தான பயணம் மேற்கொண்டு, அருகாமை நாடுகளான இந்தோனேஷியா, பிலிப்பைன்ஸ் உள்ளிட்ட நாடுகளுக்கு தப்பி வருகின்றனர்.
கடந்த பல ஆண்டுகளாக ரோஹிங்கியா முஸ்லிம்களை இந்தோனேஷிய அரசு தற்காலிக முகாம்களில் தங்க வைத்து பாதுகாத்து வந்தது. ஆனால் தற்போது அதற்கு உள்நாட்டிலேயே பெரும் எதிர்ப்பு எழுந்துள்ளது. இஸ்லாமியர்கள் பெரும்பான்மையாக வசித்து வரும் இந்தோனேஷியாவிலும் அடிக்கடி ரோஹிங்கியா முஸ்லிம்கள் தங்கி இருக்கும் முகாம்களின் மீது தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருகிறது. இதனால் வந்த இடத்திலும் நிம்மதியாக வாழ முடியாத நிலைக்கு அகதிகள் தள்ளப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் ரோகிங்கியா முஸ்லிம்கள் என்று சந்தேகிக்கப்படும் நபர்கள் படகு ஒன்றின் மூலம் இந்தோனேஷியாவின் சுமத்திரா தீவுகளுக்கு அருகில் உள்ள ஏசெக் தீவு நோக்கி கடலில் பயணித்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த இந்தோனேஷிய கடற்படையை சேர்ந்த போர்க்கப்பல் ஒன்று, அந்த படகை மீண்டும் சர்வதேச கடல் பகுதி நோக்கி விரட்டி அடித்தது. தற்போது அந்த அகதிகளின் நிலை என்ன என்பது குறித்து தகவல் எதுவும் கிடைக்காததால் பெரும் சோகம் நிலவி வருகிறது. உள்நாட்டில் தொடர் பிரச்சினைகள் எழுந்து வருவதால், இத்தகைய நடவடிக்கை எடுக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளதாக இந்தோனேஷிய அரசு விளக்கம் அளித்துள்ளது.