வெறும் 07 நிடங்களில் அரங்கேற்றப்பட்ட கொள்ளை சம்பவம் – புலனாய்வாளர்கள் வெளியிட்ட தகவல்!

உலகின் மிகவும் பிரபலமான அருங்காட்சியகத்தில் கொள்ளையிட வெறும் ஏழு நிமிடங்களே எடுத்துக்கொண்ட திருடர்கள்! அவ்வளவு பாதுகாப்பினையும் தாண்டி கொள்ளையடித்துச் சென்றது எப்படி?
பிரான்ஸில் அமைந்துள்ள லூவர் (Louvre) அருக்காட்சியகத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை திருடர்கள் தங்கள் கைவரிசையை காட்டியுள்ளனர். 102 மில்லியன் டொலர் மதிப்புள்ள 08 நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன.
உலகின் மிகவும் பாதுகாப்பான அருங்காட்சியகங்களில் ஒன்றான இதில் 07 நிமிடங்களில் கொள்ளையடித்து சென்ற அந்த திருடர்கள் யார்? அவர்கள் பிரான்சை விட்டு தப்பிச் சென்றார்களா? எவ்வளவு காலமாக இந்த கொள்ளை சம்பவத்திற்கு திட்டம் தீட்டியிருந்தார்கள்? இதன் பின்னணியில் அரசியல் பலம் கொண்ட யாராவது இருக்கிறார்களா?
இவ்வாறாக பல்வேறான கேள்விகள் புலனாய்வாளர்களின் நித்திரையை பறித்துக்கொண்டிருக்கிறது. ஒரு பிரபலமான ஆங்கில திரைப்படத்தை பார்த்து முடித்தது போல் இருக்கிறது இந்த கொள்ளைச் சம்பவம்.
இந்நிலையில் புலனாய்வாளர்கள் இதுவரை மேற்கொண்ட விசாரணைகளின் அடிப்படையில் சில முக்கிய தகவல்களை பகிர்ந்திருக்கிறார்கள். அவற்றை இந்த பதிவில் பார்க்கலாம்.
சரியாக ஞாயிற்றுக்கிழமை காலை 09.30 மணிக்கு அருங்காட்சியகத்தை வந்தடைந்த திருடர்கள் அருங்காட்சியகத்திற்குள் நுழைவதற்காக இரண்டாவது மாடியின் பால்கனியை அடைய ஏணியை பயன்படுத்தியதாக காவல்துறை கூறியுள்ளது.
அன்றைய தினத்தில் அருங்காட்சியகம் வெறும் அரை மணிநேரம் மட்டுமே திறந்திருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
கட்டுமானத் தொழிலாளர்கள் போல் வேடமிட்டிருந்த திருடர்கள் இரண்டாவது மாடியை அடைந்ததும், 09.34 மணிக்கு அங்கிருந்து சில அறைகள் தொலைவில் இருந்த ஜன்னலை வெட்டியுள்ளனர். அவ் அறைக்குள் நுழைந்த அவர்கள் மன்னர் நெப்போலியன் மற்றும் அவரது மனைவிக்கு சொந்தமான 08 நகைகளை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.
பின்னர் 09.37 மணிக்கு அலாரம் ஒலித்துள்ளது. அதனைத் தொடர்ந்து சரியாக ஒரு நிமிடத்தில் அதாவது 09.38 இற்கு அவர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர். இதற்காக அவர்கள் இரண்டு மோட்டார் சைக்கிள்களை பயன்படுத்தியதாக காவல் துறையினர் குறிப்பிட்டுள்ளனர். A6 நெடுஞ்சாலை மற்றும் லியோன் (Lyon)நகரத்தை நோக்கி அவர்கள் சென்றதாக கூறப்படுகிறது.
இதற்கிடையில் தப்பிச் செல்லும் அவசரத்தில் ஒரு நகையை அவர்கள் கைவிட்டுச் சென்றதாகவும் கூறப்படுகிறது. ஆயிரத்திற்கும் மேற்பட்ட வைரங்களால் அலங்கரிக்கப்பட்ட பேரரசி யூஜினியின் (Eugénie) கிரீடத்தையே விட்டுச் சென்றுள்ளனர்.
இந்த திருட்டு நடந்து முடிந்ததும் சம்பவ இடத்திற்கு வருகை தந்த பொலிஸார், அங்கிருந்து இரண்டு ஆங்கிள் கிரைண்டர்கள் (two angle grinders), ஒரு ப்ளோடார்ச் ( blowtorch), பெட்ரோல் (gasoline) , கையுறைகள் (gloves), ஒரு வாக்கி-டாக்கி(walkie-talkie), ஒரு போர்வை (blanket) மற்றும் கைவிடப்பட்ட கிரீடம் ஆகியவற்றை கைப்பற்றியுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து திருட்டு இடம்பெற்று ஏறக்குறைய 01 மணிநேரம் கழித்து இந்த சம்பவம் தொடர்பில் பொதுமக்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
இதில் முக்கியமான விடயம் என்னவென்றால் இந்த திருட்டு சம்பவம் காலை 09.30 மணிமுதல் 09.37 மணிக்கு இடையில் இடம்பெற்றுள்ளது. அந்நேரத்தில் அருக்காட்சியத்தில் யாரும் இருக்கவில்லையா? ஒரு ஊழியர் கூட அத்துமீறி உள்நுழைந்த நபர்களை பார்க்கவில்லையா? என்பதுதான். அத்துடன் சிசிடிவி காட்சிகள் கிடைக்கப்பெற்றதா என்ற தகவல் வெளியாவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
நன்றி – ABC செய்தி