பாகிஸ்தானில் சாலையில் இடம்பெற்ற குண்டு வெடிப்பு : 09 பேர் பலி!

தென்மேற்கு பாகிஸ்தானில் நிலக்கரி சுரங்கத் தொழிலாளர்களை ஏற்றிச் சென்ற வாகனத்தின் டயர் சாலையில் கிடந்த குண்டு ஒன்றின் மீது மோதியதில் குறித்த வாகனம் வெடித்து சிதறியுள்ளது.
இதில் ஒன்பதுபேர் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. மற்றும் பலர் காயமடைந்தனர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
பலூசிஸ்தான் மாகாணத்தின் ஒரு மாவட்டமான ஹர்னாயில் இந்தத் தாக்குதல் நடந்ததாக அரசாங்க நிர்வாகி வாலி கக்கர் தெரிவித்தார்.
இறந்தவர்களையும் காயமடைந்தவர்களையும் போலீசார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றதாகவும், அதிகாரிகள் இன்னும் விசாரணை நடத்தி வருவதாகவும் அவர் கூறினார்.
பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலோர் நாட்டின் வடமேற்கு ஸ்வாட் பள்ளத்தாக்கு மற்றும் பிற பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதற்கு யாரும் பொறுப்பேற்கவில்லை என்றாலும் பலூச் விடுதலை இராணுவ பிரிவினைவாதக் குழு மீது சந்தேகம் எழுந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.