இலங்கையில் எலிக் காய்ச்சல் பரவும் அபாயம் – பொது மக்களுக்கு எச்சரிக்கை

இலங்கையில் எலிக் காய்ச்சல் பரவுவதற்கான அதிக ஆபத்துள்ள பகுதிகளாக 12 மாவட்டங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
இந்த நிலையில் அவதானமாக செயற்படுமாறு சுகாதார அமைச்சர் டொக்டர் நளிந்த ஜயதிஸ்ஸ எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஐக்கிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹண பண்டார எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் விதமாக அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.
2024ஆம் ஆண்டு முதல் எலிக் காய்ச்சல் நோயினால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை 21,963 என்றும், 2024 ஆம் ஆண்டில் பதிவான இறப்புகளின் எண்ணிக்கை 286 என்றும் அவர் குறிப்பிட்டார்.
காலி, இரத்தினபுரி, களுத்துறை, கேகாலை, குருநாகல், மாத்தறை, ஹம்பாந்தோட்டை, அனுராதபுரம், பொலன்னறுவை, பதுளை, கம்பஹா மற்றும் மொனராகலை ஆகிய மாவட்டங்கள் லெப்டோஸ்பிரோசிஸ் பரவலுக்கான அதிக ஆபத்துள்ள பகுதிகளாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக அமைச்சர் கூறினார்.
மேலும், நோயைக் கட்டுப்படுத்த தேவையான Doxycycline போதுமான மருந்து கையிருப்பில் உள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.
எலிக் காய்ச்சலைக் கட்டுப்படுத்த மாதத்திற்கு 10,000 Doxycycline மாத்திரைகள் தேவைப்படுவதாகவும், மூன்று மாதங்களுக்குத் தேவையான அளவு Doxycycline ஏற்கனவே கையிருப்பில் உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
எதிர்காலத்தில் மேலும் ஒன்பது மாதங்களுக்குத் தேவையான அளவு மருந்து கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ மேலும் தெரிவித்துள்ளார்.