இங்கிலாந்தை உலுக்கும் ‘கோரெட்டி’ புயல்; 100 மைல் வேகத்தில் காற்று வீசும் என எச்சரிக்கை
இங்கிலாந்தில் ‘கோரெட்டி’ புயல் மற்றும் கடும் பனிப்பொழிவு காரணமாகப் பெரும் பாதிப்புகள் ஏற்படும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
இன்று (ஜனவரி 8) இங்கிலாந்தைத் தாக்கும் இந்த ‘வெதர் பாம்’ (Weather Bomb) காரணமாக 100 மைல் வேகத்தில் சூறாவளிக் காற்று வீசக்கூடும் என்றும், மிட்லண்ட்ஸ் மற்றும் வேல்ஸ் பகுதிகளில் 30 சென்டிமீட்டர் வரை பனிப்பொழிவு ஏற்படலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடும் குளிரால் உயிரிழப்புகள் அதிகரிக்கக்கூடும் என்பதால், சுகாதாரப் பாதுகாப்பு முகமை எதிர்வரும் திங்கட்கிழமை வரை ‘அம்பர்’ எச்சரிக்கையை நீடித்துள்ளது.
பல இடங்களில் வெப்பநிலை மைனஸ் 12 டிகிரிக்கும் கீழ் குறைய வாய்ப்புள்ளதால், மின்சாரத் தடை மற்றும் போக்குவரத்து பாதிப்புகள் ஏற்படக்கூடும் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
பொதுமக்கள் தேவையற்ற பயணங்களைத் தவிர்த்து, முதியவர்கள் மற்றும் நோயாளிகளின் பாதுகாப்பை உறுதி செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.





