கென்யாவில் பரபரப்பு – நாடாளுமன்றத்துக்கு தீ வைப்பு – ஐவர் பலி
கென்யாவில் போராட்டக்காரர்கள் குழு ஒன்று அந்நாட்டு நாடாளுமன்றத்துக்கு தீ வைத்தனர்.
சர்ச்சைக்குரிய நிதி சட்டமூலத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இது நடந்தது. நாடாளுமன்றத் தந்தியும் திருடப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
தலைநகர் நைரோபியில் பாதுகாப்புப் படையினருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே நடந்த மோதலில் 5 பேர் உயிரிழந்துள்ளனர்.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களில் முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவின் சகோதரி உமா ஒபாமாவும் அடங்குவதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இது தொடர்பாக நாட்டு மக்களுக்கு உரையாற்றிய ஜனாதிபதி வில்லியம் ரூட்டோ, குறித்த ஆர்ப்பாட்டக்காரர்கள் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகள் எனத் தெரிவித்துள்ளார்.
அவர்களுக்கு எதிராக சட்டம் அமுல்படுத்தப்படும் எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
எதிர்ப்புகளை ஏற்படுத்திய நிதி மசோதாவின்படி, சில அத்தியாவசிய சேவைகள் மற்றும் பொருட்களுக்கு மதிப்பு கூட்டு வரி சேர்க்கப்பட உள்ளது.
எவ்வாறாயினும், கடந்த வாரம் முதல் இதற்கு எதிரான போராட்டங்கள் காரணமாக, அந்த மசோதாவில் இருந்து பல வரி அதிகரிப்புகளை நீக்க அந்நாட்டு அரசாங்கம் முடிவு செய்துள்ளது.