சொந்த நாடுகளை விட்டு வெளியேறும் பணக்காரர்கள் – வேறு நாடுகளுக்கு குடிபெயரும் மில்லியனர்கள்
உலகின் பல நாடுகளுக்கு குடிபெயரும் பணக்காரர்களின் எண்ணிக்கை இந்தாண்டும் கணிசமாக உயரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பிரபல ஆய்வு நிறுவனத்தின் ஆண்டறிக்கையில் இந்த விடயம் தெரிவித்துள்ளது.
உயர் வரிவிதிப்புக் கொள்கைகள், பொருளாதார அச்சுறுத்தல்கள், அரசியல் பதற்றங்கள், முதலீட்டு வாய்ப்புகள், பாதுகாப்பு, சிறந்த வாழ்க்கைத் தரம், சிறந்த கல்வி, சுகாதாரம் உள்ளிட்டவற்றுக்காக பல்வேறு நாட்டு மில்லியனர்களும் வேறு நாடுகளுக்கு குடிபெயர்ந்து வருகின்றனர்.
அந்த வகையில், கடந்தாண்டில் மட்டும் சுமார் 1,34,000 மில்லியனர்கள் வெவ்வேறு நாடுகளுக்கு புலம்பெயர்ந்தனர்.
இவர்கள் அமெரிக்கா, இத்தாலி, டுபாய் முதலான நாடுகளில்தான் பெரும்பாலும் புலம்பெயர்கின்றனர்.
மேலும், பிரித்தானியாவுக்கு அதிகப்படியானோர் புலம்பெயர்ந்தாலும், பிரித்தானியாவில் இருந்து வேறு நாடுகளுக்கு புலம்பெயர்பவர்களின் எண்ணிக்கையும் ஆண்டுக்கு ஆண்டு கணிசமாக உயர்கிறது.
2022 ஆம் ஆண்டில் பிரிட்டனில் இருந்து 1600 மில்லியனர்கள் புலம்பெயர்ந்தனர்; 2023-ல் 3200 பேரும், 2024-ல் மூன்று மடங்கு அதிகரித்து 9500 மில்லியனர்களும் புலம்பெயர்ந்துள்ளனர். கொரோனா தொற்றின்போது குறைந்திருந்த மில்லியனர்களின் புலம்பெயர்வு, மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.
இந்த நிலையில், கடந்தாண்டைவிட தற்போதைய 2025 ஆம் ஆண்டிலும் அதிகளவில் மில்லியனர்கள் புலம்பெயர வாய்ப்புகள் இருப்பதாக ஆண்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தாண்டில் மட்டும் 1,42,000 மில்லியனர்கள் புலம்பெயரலாம் என்று கூறப்படுகிறது.