நுளம்பைக் கொன்றால் சன்மானம்

பிலிப்பைன்ஸின் தலைநகர் பகுதியில் பரவிவரும் டெங்கு காய்ச்சலைக் கட்டுப்படுத்துவதற்காக, அந்த நோயைப் பரப்பும் நுளம்புகளை உயிருடனோ, கொன்றோ பிடித்துத் தருவோருக்கு சன்மானம் அளிக்கப்படும் என்று பிராந்திய நிர்வாகம் அறிவித்துள்ளது.
மண்டாலுயோங் நகரின் அடிஷன் ஹில்ஸ் என்ற பகுதியில் இந்த புதுமையான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அருகில் உள்ள குவேஸான் நகரில் நுளம்புகள் மூலம் பரவும் நோய்களின் தாக்கம் கடந்த வாரம் மிகவும் தீவிரமடைந்தது.
அதன் தொடர்ச்சியாக, எட்டு புதிய பகுதிகளுக்கும் இந்த நெருக்கடி பரவும் என்று அதிகாரிகள் எச்சரித்தனர்.
இதைத் தொடர்ந்து, பொதுமக்கள் உயிருடனோ, கொன்றோ கொண்டுவந்து தரும் தலா ஐந்து நுளம்புகளுக்கு அல்லது முட்டைகளுக்கு ஒரு பிலிப்பின்ஸ் பிசோ (ரூ.1.50) சன்மானம் அளிக்கப்படும் என்று உள்ளூர் நிர்வாகம் அறிவித்துள்ளது.
எனினும், இந்த அறிவிப்பால் பொதுமக்கள் அதிகம் பணம் ஈட்டுவதற்காக வேண்டுமென்றே தண்ணீரைத் தேங்கவைத்து நுளம்புகளை உற்பத்தி செய்யும் அபாயமும் ஏற்படும் என்று நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
பிலிப்பைன்ஸில் பிப். 1 நிலவரப்படி இந்த ஆண்டு மட்டும் 28,234 பேருக்கு டெங்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தோடு ஒப்பிடுகையில் இது 40 சதவீதம் அதிகம்.