மருத்துவத்துறையில் புரட்சி – மருந்துகளைப் பரிந்துரைக்கும் AI
Oxford பல்கலைக்கழக விஞ்ஞானிகளால் உருவாக்கப்பட்டுள்ள Drug-GPT என்ற புதிய AI கருவி, மருத்துவர்கள் மருந்துகளைப் பரிந்துரைக்கும்போது அவற்றை நிர்வகிக்கவும், நோயாளிகள் மருந்துகளை எப்படி எடுத்துக்கொள்ள வேண்டும் என்பதை மருத்துவர்களுக்குத் தெரியப்படுத்தவும் தகவல்களை வழங்குகிறது.
மருந்துகளைப் பரிந்துரைக்கும் மருத்துவர்கள் அல்லது பிற சுகாதார நிபுணர்கள் நோயாளியின் நிலைமைகளை இந்தக் கருவியில் உள்ளிடுவது மூலமாக, சரியான மருந்துகளைத் தேர்வு செய்ய வழிகாட்டுதல்கள் கிடைக்கும். இதைப் பயன்படுத்தி, சரியான மருந்துகளைதான் பரிந்துரைக்கிறோமா என்பதை மருத்துவர்கள் சரிபார்த்துக் கொள்ளலாம்.
Drug-GPT வெறும் மருந்துகளை மட்டும் தேர்ந்தெடுக்காமல், அவற்றை நாம் ஏன் பயன்படுத்த வேண்டும்? எவ்வாறு பயன்படுத்த வேண்டும்? யார் யாருக்கு பயன்படுத்த வேண்டும்? என்று அனைத்தையும் விளக்கிக் கூறுகிறது. இந்தக் கருவியை உருவாக்கும் திட்டத்தை ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் AI For Healthcare ஆய்வகத்தின் குழு வழிநடத்தியது.
இதன் தேவை என்ன?
பிரிட்டிஷ் மருத்துவ இதழில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வறிக்கையில், இங்கிலாந்தில் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 237 மில்லியன் மருந்துப் பரிந்துரைப் பிழைகள் ஏற்படுவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால் சுமார் 98 மில்லியன் யூரோ நஷ்டமாவது மட்டுமின்றி, 1700க்கும் அதிகமான உயிர்களும் பறிபோகின்றன. இத்தகைய பாதிப்புகளைத் தடுக்கும் விதமாகவே Drug-GPT உருவாக்கப்பட்டுள்ளது.
Drug-GPT உருவாக்கும் தகவல்களின் அடிப்படையில் சரியான மருந்துகளைத் தேர்வு செய்து, அதன் சாதக பாதக விளைவுகளை நோயாளிகளுக்குத் தெரியப்படுத்த மருத்துவர்கள் அறிவுறுத்தப்படுகின்றனர். இதன் மூலமாக நோயாளிகளால் மருந்துகள் தவறாக எடுத்துக்கொள்வது தவிர்க்கப்பட்டு, மருந்துகள் சரியானபடி வேலை செய்ய அதிக வாய்ப்பும் ஏற்படுகிறது.
இருப்பினும் இத்தகைய கருவிகள் தவறான தகவல்களை வழங்கினால் ஏற்படக்கூடிய அபாயங்கள் காரணமாக, உலகளாவிய மருத்துவ சங்கங்களால் இந்த AI இன்னும் அங்கீகரிக்கப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. ஆனால், இத்தகைய கருவிகளால் எதிர்காலத்தில் சுகாதாரத் துறையில் பெரும் தாக்கம் ஏற்படும் என்று வல்லுனர்கள் நம்புகின்றனர்.