கனடாவின் நடவடிக்கைக்கு பதிலடி; அந்நாட்டு தூதரை வெளியேற்றிய சீனா
கனடா மற்றும் சீனா இடையே கடந்த 2018ம் ஆண்டு முதல் பதற்ற நிலை காணப்படுகிறது. சீனாவின் ஹூவாவெய் பகுதியை சேர்ந்த முக்கிய நபரை கனடா கைது செய்தது. இதற்கு பதிலடியாக சீனாவும், கனடா நாட்டை சேர்ந்த 2 பேரை தனது நாட்டில் வைத்து கைது செய்தது.அவர்கள் 3 பேரும் பின்னர் விடுவிக்கப்பட்ட போதிலும், அமெரிக்காவின் கொள்கையை கனடா பின்பற்றுகிறது என கூறி தொடர்ந்து அந்நாடு மீது சீனா குமுறலை வெளிப்படுத்தி வருகிறது.
இந்த நிலையில், சீனாவில் ஜின்ஜியாங் பகுதியில் இனப்படுகொலை நடைபெறுவதற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையிலான தீர்மானம் ஒன்றை ஆதரித்ததற்காக கனடாவின் எம்.பியான மைக்கேல் சோங் மற்றும் அவரது உறவினர்களை ஹாங்காங்கில் வைத்து சீன உளவு அமைப்புகள் கைது செய்ய திட்டமிட்டன.
இதுபற்றி அறிந்ததும் கனடா அரசு கடும் நடவடிக்கைகளை எடுத்துள்ளது. சமீபத்தில், கனடா வெளியுறவு மந்திரி மெலானி ஜோலி கூறும்போது, இந்த திட்டத்தில் முக்கிய பங்கு வகித்ததற்காக சீன தூதர் ஜாவோ வெய், கனடாவை விட்டு வெளியேற வேண்டும் என கூறினார். எங்களது உள்நாட்டு விவகாரங்களில் வெளிநாட்டு தலையீட்டை எந்த வடிவிலும் நாங்கள் சகிக்கமாட்டோம் என அவர் கூறினார்.
கனடாவில் உள்ள மற்ற வெளிநாட்டு தூதர்களுக்கும் இதுபோன்ற எச்சரிக்கையை கனடா விடுத்துள்ளது. இந்த நிலையில், இதற்கு பதிலடியாக சீன வெளியுறவு அமைச்சகம் இன்று கண்டனம் தெரிவித்து உள்ளதுடன், வருகிற மே 13ம் திகதி சீனாவில் இருந்து வெளியேறும்படி, கனடா தூதர் ஜெனிபர் லின் லாலண்டுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது என அறிவித்தது. இதுபோன்ற காரணமற்ற முறையிலான ஆத்திரமூட்டும் செயல்களை நிறுத்தும்படி கனடாவை சீன வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் வாங் வென்பின் வலியுறுத்தி உள்ளார்.