அனைத்து பாலர் பாடசாலைகளுக்கும் ஒரே பாடத்திட்டத்தை அறிமுகப்படுத்த தீர்மானம்!

2026 ஆம் ஆண்டு முதல் அனைத்து பாலர் பாடசாலைகளுக்கும் ஒரே பாடத்திட்டம் அறிமுகப்படுத்தப்படும் என்று பிரதமரும் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சருமான டாக்டர் ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற கல்வி சீர்திருத்தங்களுக்கான நாடாளுமன்ற துணைக்குழுவின் கூட்டத்திற்கு தலைமை தாங்கும் போது பிரதமர் இந்தக் கருத்துக்களை தெரிவித்தார்.
இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர், ஆரம்பகால குழந்தைப் பருவ பாடத்திட்ட கட்டமைப்பு ஏற்கனவே நிறைவடைந்துள்ளதாகவும், கிட்டத்தட்ட 19,000 பாலர் பள்ளி ஆசிரியர்களுக்கான பயிற்சி நவம்பர் 25, 2025 அன்று தொடங்கும் என்றும் அவர் கூறினார்.
புதிய பாடத்திட்டத்தின் கீழ் பாடங்களை வழங்க ஆசிரியர்கள் முழுமையாகத் தயாராக இருப்பதை உறுதி செய்வதற்காக ஒவ்வொரு மாகாணத்திலும் பயிற்சி அமர்வுகள் நடத்தப்படும்.
அரசாங்கத்தின் கொள்கை பாடசாலைகளை மூடுவது அல்ல, மாறாக தரமான கல்வி மற்றும் அனைத்து மாணவர்களுக்கும் சம வாய்ப்புகளை உறுதி செய்வதற்காக அவற்றை ஒருங்கிணைத்து மேம்படுத்துவதாகும்” எனத் தெரிவித்துள்ளார்.