உண்ணாவிரதம் இருக்கும் அபிவிருத்தி உத்தியோகத்தர்களை பணிநீக்கம் செய்துவிட்டு வேலையில்லா பட்டதாரிகளுக்கு நியமனம் வழங்குமாறு வேண்டுகோள்
அபிவிருத்தி உத்தியோகத்தர்களாக நியமிக்கப்பட்டு கடமையாற்றி வரும் பட்டதாரிகள் நினைத்த ஆசிரியர் நியமனத்தை கேட்டு உண்ணாவிரதம் இருப்பது ஏற்றுக் கொள்ள முடியாது எனவே நாடாளுமன்றத்தை கூட்டி இவர்களை பணி நீக்கம் செய்துவிட்டு இவர்கள் இடத்துக்கு பல்கலைக்கழக பட்டபடிப்பை முடித்து கூலி வேலை செய்துவரும் ஆயிரக்கணக்கான பட்டதாரிகளுக்கு நியமனங்களை ஜனாதிபதி வழங்க வேண்டும் என ஈ.பி.டி.பி மட்டு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அந்தனிசில் ராஜ்குமார் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மட்டக்களப்பு வொய்ஸ் ஒப் மீடியா கற்கை நிலையத்தில் இன்று வெள்ளிக்கிழமை (30) இடம்பெற்ற ஊடக மாநாட்டில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இங்கு மேலும் கருத்து தெரிவித்த அவர்,
“பல்கலைக்கழக படிப்பை பூர்த்தி செய்த எத்தனையே பட்டதாரிகள் கூலி வேலைக்கு செல்கின்றனர் அவர்கள் கூறுகின்றனர் இந்த வேலை வாய்ப்பை தங்களுக்கு கிடைத்தால் எந்த பிரச்சனையும் இன்றி இந்த நியமனத்தை ஏற்றுக் கொள்ள முடியும்.
எங்களுக்கு வேலை வாய்ப்புகள் வழங்கப்படவில்லை இவர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கப்பட்டும் இவர்கள் நினைத்த வேலைவாய்ப்பை கோரி உண்ணாவிரதம் இருக்கின்றனர் என்கின்றனர்.
எனவே உண்ணா விரதம் இருக்கும் அபிவிருத்தி உத்தியோகத்தர்களிடம் தயவாக கேட்டுக் கொள்கிறோம். வேலையில்லா பட்டதாரிகள் என வீதிக்கு இறங்கி போராடிய போது உங்களுக்கு அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கான நியமனம் வழங்கப்பட்டது. எனவே வழங்கப்பட்ட இந்த தொழிலை ஏற்றுக் கொண்டு உண்ணாவிரத போராட்டத்தை கைவிடுங்கள்.
இப்போது ஆசிரியர் நியமனத்தை கேட்டு உண்ணாவிரதம் இருக்கிறீர்கள் இன்று எத்தனையோ பட்டதாரிகள் அரச வேலையின்றி மேசன் மற்றும் கூலி தொழில்களுக்குச் செல்கின்றனர். அவர்களுக்கு அரசாங்க வேலை இல்லை உங்களுக்கு வேலை வழங்கியும் நீங்கள் நினைத்த வேலையை கேட்டு உண்ணாவிரதம் இருப்பது கண்டிக்கப்பட வேண்டிய விடயம்.
உங்களுக்கு ஆசிரியர் தொழில்தான் வேண்டுமாயின் அபிவிருத்தி உத்தியோகத்தர் தொழிலுக்கு செல்லாமல் ஆசிரியர் நியமனம் கிடைக்கும் வரை நீங்கள் உங்கள் தொழில்களை கைவிடுங்கள்.
எனவே ஜனாதிபதியிடம் வேண்டிக் கொள்வது நாடு இக்கட்டான சூழ்நிலையில் இருக்கின்ற காரணத்தால் இவ்வாறான தேவையற்ற ஆர்ப்பாட்டங்களை செய்து நாட்டை குழப்புவதை நீங்கள் பார்த்து கொண்டு இருக்காமல் நாடாளுமன்ற பெரும்பான்மை உங்களிடம் இருப்பதால் உடனடியாக நாடாளுமன்றத்தை கூட்டி பெரும்பான்மையை எடுத்து இவர்களுக்கான ஒரு தீர்மானத்தை கொண்டு வாருங்கள்.
ஒன்று இவர்களுக்கு ஆசிரியர் நியமனம் கிடைக்கும் வரைக்கும் இவர்களுக்கு ஆசிரியர் நியமனம் தேவை என்றால் ஆசிரியர்களுக்கான வெற்றிடம் கிடைக்கும் வரைக்கும் இவர்களை பணி இடைநீக்கம் செய்து விட்டு வேலையற்ற பட்டதாரிகளுக்கு அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கான நியமனங்களை வழங்குங்கள். இவர்களுக்கான ஆசிரியர் வெற்றிடங்கள் இருக்கும் போது இவர்களுக்கான ஆசிரியர் நியமனங்களை வழங்குங்கள்.
எனவே போதியளவு பெரும்பான்மை நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருந்தால் இந்த நாட்டை குழப்பி கொண்டு இருப்பவர்களுக்கு ஒரு முக்கியமான தீர்மானத்தை எடுத்து இவர்களுடைய உண்ணாவிரத போராட்டத்திற்கு முற்றுப்புள்ளி வைத்து வேலை இல்லா பட்டதாரிகளுக்கு அந்த நியமனங்களை வழங்கிவிட்டு ஆசிரியர் நியமன வெற்றிடங்கள் வரும் வரைக்கும் இவர்களை காத்திருக்குமாறு கூறி இந்த உண்ணாவிரத போராட்டத்தை முடிவக்கு கொண்டுவரும்படி ஜனாதிபதியிடம் தயவாக கேட்டுக் கொள்கின்றோம்” என்றார்.





