தரமற்ற மருந்துகள் குறித்து விசாரணை நடத்த குழுவை நியமிக்குமாறு கோரிக்கை!

தரமற்ற மருந்துகளை இறக்குமதி செய்வதால் நோயாளிகள் உயிரிழப்பது மற்றும் சிக்கல்கள் குறித்து வெளிப்படையான விசாரணை நடத்த குழுவை நியமிக்குமாறு உத்தரவிடக் கோரி உச்ச நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
நோயாளிகளின் இறப்பு மற்றும் சிக்கல்கள் தொடர்பில் வெளிப்படையான விசாரணைகளை மேற்கொள்ள சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் மற்றும் 05 நிபுணர் வைத்தியர்கள் அடங்கிய விசாரணைக் குழுவை நியமிக்குமாறு சுகாதார அமைச்சர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிடுமாறு கோரப்பட்டுள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர்களான காவிந்த ஜயவர்தன மற்றும் ஹர்ஷன ராஜகருணா ஆகியோர் இந்த மனுவை சமர்ப்பித்துள்ளனர்.
தேசிய மருந்து ஒழுங்குமுறை அதிகாரசபை, அதன் தலைவர் மற்றும் ஏனைய உறுப்பினர்கள், சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல மற்றும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் ஆகியோர் மனுவில் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளனர்.
இலங்கையில் உள்ள மருந்துகளின் தரம் மற்றும் தரத்தைப் பாதுகாக்க, பதிவு செய்யவும், பதிவை ரத்து செய்யவும், உற்பத்தியை அங்கீகரிக்கவும், விலையை நிர்ணயம் செய்யவும், சேமிப்பை அங்கீகரிப்பதற்காகவும் தேசிய மருந்துகள் ஒழுங்குமுறை ஆணையத்துக்கு அதிகாரம் உள்ளது என்று மனுதாரர்கள் கூறுகின்றனர்.
எவ்வாறாயினும், கடந்த காலங்களில் இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட இரண்டு வகையான மயக்க மருந்து மற்றும் ஒரு வகை கண் மருந்து காரணமாக தீவின் சில பகுதிகளில் நோயாளிகள் மரணம் மற்றும் சிக்கல்கள் ஏற்பட்டதாக மனுதாரர்கள் தெரிவிக்கின்றனர்.
இதனால் சம்பந்தப்பட்ட மருந்துகளை பயன்பாட்டிலிருந்து நீக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆனால் இந்த மருந்துகளை பயன்படுத்துவதால் ஏற்படும் உயிரிழப்புகள் மற்றும் சிக்கல்கள் குறித்து இதுவரை முறையான விசாரணை நடத்தப்படவில்லை என்று குறிப்பிடப்பட்டுள்ளது.