பாம்பனில் மீனவர்களின் உறவினர்கள் சாலை மறியலில்
இலங்கை சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள பாம்பன் பகுதி மீனவர்களை உடனடியாக விடுவிக்கக் கோரி, அவர்களது உறவினர்கள் இன்று (ஜனவரி 25) காலை முன்னெடுத்த திடீர் சாலை மறியல் போராட்டத்தால் பாம்பன் பகுதியில் பதற்றம் நிலவியது.
கடந்த ஆண்டு ஒகஸ்ட் மாதம் 5-ஆம் திகதி எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட 10 பாம்பன் மீனவர்கள், சுமார் ஐந்து மாதங்களாகியும் இன்னும் விடுவிக்கப்படாததைக் கண்டித்தே இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
பாம்பன் பேருந்து நிலையம் முன்பாக மதுரை – தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலையில் மீனவர்களின் குடும்பத்தினர் அமர்ந்து மறியலில் ஈடுபட்டதால், நீண்ட தூரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன.
சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் மற்றும் அதிகாரிகள், மீனவர்களை விடுவிக்கத் தூதரக ரீதியில் உரிய நடவடிக்கை எடுப்பதாக வழங்கிய வாக்குறுதியை அடுத்து, பல மணிநேரப் போராட்டத்திற்குப் பின்னர் உறவினர்கள் கலைந்து சென்றனர்.
இருந்தபோதிலும், தமது வாழ்வாதாரமான மீனவர்களை மீட்கும் வரை போராட்டங்கள் தொடரும் என அவர்கள் எச்சரித்துள்ளனர்.





