நாவற்சோலை கிராம மக்களின் குடிநீர் பிரச்சினை: கிணறுகள் புனரமைக்கப்பட்டு பொதுமக்களுக்கு கையளிப்பு
திருகோணமலை -நாவற்சோலை கிராம மக்களின் குடிநீர் பிரச்சினையை தீர்க்கும் முகமாக கிணறுகள் புனரமைக்கப்பட்டு பொதுமக்களுக்கு கையளிக்கப்பட்டது.
சுனாமியால் பாதிக்கப்பட்ட வறிய மக்கள் குடியேற்றிய ஓர் கிராமம் ஆகும். இது திருகோணமலை -முல்லைத்தீவு வீதியில், திருகோணமலை நகரில் இருந்து வடபுறமாக 24 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. இங்கு 600 குடும்பங்கள் வரையில் வாழ்கின்றன.
இங்கு மக்கள் குடியேற்றிய பொழுது தொண்டு நிறுவனங்கள் இரண்டு கிணறுகளை அமைத்துக் கொடுத்தன.
அவற்றில் இருந்தே இவ்வூருக்குக் குடிநீர் வழங்கப்படுகின்றது.மேற்படி கிணறுகளில் ஊறும் நீர், மக்களது தேவைக்குப் போதுமானதாக இல்லை
இந்தச் சூழ்நிலையில் குச்சவெளிப் பிரதேச செயலாளர் “இவ்வூர் மக்களுக்கு குடிநீர் வழங்குவதற்காக ஒரு கிணறு அமைத்துத் தருமாறு” திருகோணமலை மாவட்ட நலன்புரிச் சங்கத்திடம் வேண்டுகோள் விடுத்தார்.
இவ்வேண்டுகோளை ஏற்றுக்கொண்ட திருகோணமலை மாவட்ட நலன்புரிச் சங்கம் பதினைந்து இலட்சம் ரூபா செலவில் 24 அடி ஆழமும் 18 அடி விட்டமும் கொண்ட கிணறு ஒன்றை அமைத்துக் கொடுத்துள்ளது. குச்சவெளிப் பிரதேச செயலாளர் இன்று இக்கிணற்றைப் பார்வையிட்டதுடன் பொதுமக்களிடம் கையளித்தார்.
இக்கிணற்றை அமைப்பதற்கான நிதியைக் கனடாவில் வாழும் நக்கீரன் ஐயா என அழைக்கப்படும் திரு வேலுப்பிள்ளை தங்கவேலு அவர்கள் வழங்கி வைத்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.