அரசாங்கத்துடன் இணைந்து செயல்பட தயார்: மனோ அறிவிப்பு!
“பாதுகாப்பான வதிவிட காணி” என்ற உரிமையை பெறுவதற்கு ஆளுங்கட்சி மலையக பிரதிநிதிகளுடன் இணைந்து செயற்பட தயார்.”
இவ்வாறு தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் அறிவித்துள்ளார்.
விசேட அறிக்கையொன்றை இன்று விடுத்தே மனோ கணேசன் எம்.பி. இவ்வாறு கூறியுள்ளார்.
“இதற்கு முன் நடைபெற்ற அவலங்களை விட இந்த முறை அவலம் அவதானத்துக்கு உரியது என நான் நம்புகிறேன்.
ஏறக்குறைய பெரும்பாலான மலை பகுதிகளிலும் மலை பாறைகள், மலை மேடுகள், தரை நிலங்கள் வெடித்து உள்ளன.
இடைவெளிகளில் நீர் வெளியேறுகின்றன. இது இயற்கை அனர்த்தம். சிலர் கூறுவதை போன்று இவற்றை கொங்ரீட் போட்டு ஓட்ட முடியாது. இவை இயற்கை நில வெடிப்பு.” எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
மலைநாட்டில், மலை உச்சி, மண் சரிவு அபாயங்களை உடனடியாக எதிர் கொள்ளும் பிரிவினர் இருக்கிறார்கள்.
இவர்களின் பிரச்சினை, சமூகத்தில் மிகவும் விளிம்பு நிலையில் வாழும் பிரிவினரின் பரிதாப பிரச்சினை.
இவர்களை அடையாளம் கண்டு, இவர்களுக்கு பாதுகாப்பான வதிவிட காணிகளை அரசிடம் அவசரமாக கோருவோம்.
இது தொடர்பில் ஜனாதிபதி தோழர் அநுர குமார திசாநாயக்கவுடன் நான் கடந்த வாரம் நேரடியாக நாடாளுமன்றத்தில் உரையாடி உள்ளேன்.
பேரவலத்தை அடுத்து, நான் பல இடங்களுக்கு எனது கட்சி குழுவினருடன், நிவாரண பொருள் உதவிகளுடன், கண்காணிப்பு பயணங்கள் மேற்கொண்டேன்.
நான் போன பல இடங்களில், கண்டி நாவலபிட்டிய கங்க-இஹல-கோரள-அலுகொல்ல மலை உச்சி தோட்டம், மிகவும், ஆபத்து நிறைந்த பூமியாக என் மனதில் நிற்கிறது.
அங்கே அனாதரவாக இருந்த மக்களுக்கு, நாம் விநியோகித்த, உடனடி நிவாரணத்தை பெற்று கொண்ட அவர்கள் தம் வாழ்விட பரிதாப நிலையை எனக்கு கூறினார்கள்.
நான் அந்த மலை உச்சியில் மலையேறி நடக்கும் போதே, என் கால்களுக்கு கீழே, தரை பிளந்து, உள்ளே இருந்து நீர் பீறிட்டு வெளியே வருவதை என் கண்களால் கண்டேன்.
மீண்டும் ஒரு மழையோ, மண் சரிவோ வருமானால், கீழே உருண்டு வர தயாராக இருக்கும், பாறைகளையும், உயர்ந்த மண்மேடுகளையும், கண்டேன். இதை விட என்ன பரிதாபம் இருக்க முடியும்? எனவும் மனோ கணேசன் கேள்வி எழுப்பினார்.
பாதுகாப்பான மாற்று காணிகள் இவர்களுக்கு வழங்க பட வேண்டும். அதுவும் அவசரமாக முன்னுரிமை அடிப்படையில் நடைபெற வேண்டும்.
ஆகவே, அரசியல் கட்சி, ஆளும் கட்சி, எதிர்க்கட்சி, பேதங்களுக்கு அப்பால் இந்த விடயத்தில் நாம் ஒன்று பட்டு செயல்படவேண்டும்.” என மனோ கணேசன் தனது அறிக்கையில் மேலும் குறிப்பிட்டுள்ளார்.




