அரசியல் குற்றச்சாட்டை எதிர்கொள்ளத் தயார்; பிலிப்பீன்ஸ் துணை அதிபர்

பிலிப்பீன்ஸ் துணை அதிபர் சாரா டுட்டர்டே, கடந்த ஆண்டிலிருந்தே (2024) அரசியல் குற்றச்சாட்டுக்குத் தம்மைத் தயார்ப்படுத்திக் கொண்டுள்ளதாக, வெள்ளிக்கிழமை (பிப்ரவரி 7) கூறியுள்ளார்.
தமது தந்தையும் நாட்டின் முன்னாள் அதிபருமான ரோட்ரிகோ டுட்டர்டே அவர் விரும்பினால் தம்மைத் தற்காக்கும் தரப்பில் இணைந்துகொள்ளலாம் என்றும் அவர் குறிப்பிட்டார்.
நாடாளுமன்றக் கீழவையின் பெரும்பான்மையான உறுப்பினர்களின் ஆதரவுடன் தாக்கல் செய்யப்பட்ட தம் மீதான புகாரைப் படித்துப் பார்க்கவில்லை என்று கூறிய டுட்டர்டே, இருப்பினும் செனட் சபை விசாரணை தொடர்பில் தமது வழக்கறிஞர்கள் மும்முரமாகத் தயாராகி வருவதாகக் கூறினார்.
பதவி விலகுவாரா என்று செய்தியாளர் சந்திப்பில் கேட்கப்பட்ட கேள்விக்குப் பதிலளித்த அவர், விவகாரம் இன்னும் அந்த அளவிற்குச் செல்லவில்லை என்றார்.
அரசமைப்புச் சட்டத்தை மீறியது, லஞ்ச ஊழல், பொதுமக்களின் நம்பிக்கைக்குத் துரோகம் செய்தது உள்ளிட்டவை தொடர்பில் பிப்ரவரி 5ஆம் திகதி, டுட்டர்டே மீது அரசியல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது.
துணை அதிபராகவும் கல்வி அமைச்சராகவும் செயல்பட்டபோது பொது நிதியைத் தவறாகப் பயன்படுத்தியது, பேரளவில் சொத்து சேர்த்தது, அதிபர் ஃபெர்டினாண்ட் மார்கோஸ் ஜூனியர், அவரது மனைவி, நாடாளுமன்ற நாயகர் ஆகியோருக்குக் கொலை மிரட்டல் விடுத்தது ஆகியவை தொடர்பில் அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
ஆனால், தாம் கொலை மிரட்டல் விடுக்கவில்லை என்று பிப்ரவரி 7ஆம் திகதி பேசுகையில் அவர் மீண்டும் வலியுறுத்தினார். டுட்டர்டேவைப் பதவிநீக்கம் செய்வதற்கு மூன்றில் இரண்டு பங்கு செனட்டர்களின் ஆதரவு தேவை.