தனித்து போட்டியிடவும் தயார் – சுமந்திரன்
பாராளுமன்ற தேர்தலில் தமிழரசுக் கட்சியின் சின்னத்தில் தமிழரசு கட்சியின் பெயரில் தேர்தலில் இணைந்து போட்டியிடுவதற்கு அழைப்பு விடுத்திருந்தோம்.
அழைப்பை ஏற்றுக் கொள்ளாவிட்டால் தனித்து தேர்தலை எதிர் கொள்வோம் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம். ஏ சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
மன்னாரில் இன்றைய தினம் திங்கட்கிழமை ஊடகங்களை சந்தித்த போதே அவ்வாறு தெரிவித்தார்.
மேலும் தெரிவிக்கையில்,
நாங்கள் அண்மையில் எமது தமிழரசு கட்சியின் கூட்டத்தில் மேற்கொண்ட தீர்மானம் இலங்கை தமிழரசு கட்சி ஏற்கனவே தமிழ் தேசிய கூட்டமைப்பில் இருந்த கட்சிகள் அனைவரையும் கட்சிக்கு வருமாறு அழைப்பதாகவும் இலங்கை தமிழரசு கட்சியின் பெயரிலும் தமிழரசு கட்சியின் சின்னத்திலும் தேர்தலில் போட்டியிடுவதற்கும் அழைப்பு விடுப்பதாக தீர்மானித்து இருந்தோம்.
அப்படி அவர்கள் வரா விட்டால் இலங்கை தமிழரசு கட்சி ஆகிய நாங்கள் தனித்து போட்டியிடுவதாகவும் ஏற்கனவே தீர்மானம் எடுத்திருந்தோம்.
ஆகவே நியமன பத்திரம் தாக்கல் செய்வதற்கு இன்னும் சிறிது காலமே இருப்பதால் அவர்களும் தங்கள் முடிவுகளை துரிதமாக தெரியப் படுத்துவதனால் வெகு விரைவில் அன்று நாங்கள் நியமித்த நியமன குழு கூடி அவர்கள் இணங்கி வரவில்லை என்றால் அவற்றை கருத்தில் எடுத்து தமிழரசு கட்சியின் வேட்பாளர்களை நாங்கள் தீர்மானிப்போம் என தெரிவித்தார்.
மேலும், எதிர்வரும் தேர்தலில் இளைஞர்கள்,யுவதிகள்,ஆற்றல் உள்ளவர்களுக்கு வாய்ப்பு வழங்க வேண்டும் என்பதுடன் ஏற்கனவே பாராளுமன்ற உறுப்பினர்களாக இருந்து மீண்டும் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு தோல்வி உற்றவர்களுக்கு வாய்ப்பு வழங்குவதில்லை என்ற தீர்மானத்தையும் மேற்கொண்டுள்ளோம் என்றும் தெரிவித்தார்.