கம்போடியாவில் கண்ணிவெடிகளை கண்டுபிடித்து அழிக்க உதவும் எலிகள்

கம்போடியாவில் மோப்ப நாய்களை போல் ஆப்ரிக்க பெரிய எலிகளை பயன்படுத்தி, நிலத்தில் மறைந்துள்ள கண்ணிவெடிகளை கண்டு பிடித்து அழிக்கும் பணியில், அரசாங்கம் ஈடுபட்டுள்ளது.
தென் கிழக்கு ஆசிய நாடான கம்போடியாவில், கடந்த 1990ம் ஆண்டு வரை உள்நாட்டு போர் நிலவியது. அப்போது நாடு முழுதும் உள்ள 25 மாகாணங்களில் ஏராளமான கண்ணிவெடிகள் புதைக்கப்பட்டன.
இதை தவறுதலாக மிதித்து ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். இவற்றை கண்டறிந்து அழிக்கும் பணி கடந்த 1992ல் துவங்கியது. இதுவரை 11 லட்சம் கண்ணிவெடிகள் மற்றும் 29 லட்சம் பிற வெடிகுண்டுகள் அகற்றப்பட்டுள்ளன.
இன்னும் 1,970 சதுர கி.மீ., பரப்பில் இந்த கண்ணிவெடிகள் புதைந்துள்ளதாக அந்நாட்டின் கண்ணிவெடி கண்டறிதல் மற்றும் பாதிக்கப்பட்டோர் உதவி ஆணையம் கூறியுள்ளது.
முன்னர் கண்ணிவெடிகளை கண்டுபிடித்து மோப்ப நாய் உதவியை இந்தக் குழுவினர் பயன்படுத்தினர். சமீப காலமாக ஆப்ரிக்க பெரிய எலிகளை இந்த பணிக்கு பயன்படுத்துகின்றனர்.
இந்த எலிகள் 1.5 அடி நீளமும், 1.5 கிலோ எடை வரையும் வளரும். மிகவும் புத்தி கூர்மையுடையவை. இதை பயிற்றுவிக்க முடியும். கண்ணிவெடிகள் மட்டுமின்றி, காசநோய் போன்ற தொற்றுநோய்களை இந்த எலி வகைகளால் துல்லியமாக கண்டறிய முடியும்.
கண்ணிவெடிகளை கண்டறிய பயிற்றுவித்து, கம்போடிய ராணுவம் பயன்படுத்தி வருகிறது.
நாய்களை போல் கழுத்துப்பட்டை மாட்டி, கண்ணிவெடிகள் புதைந்துள்ள பகுதிகளுக்கு இந்த எலிகளை அழைத்துச் செல்கின்றனர். கண்ணிவெடியை கண்டுபிடித்த உடன் இந்த எலிகள் அங்கிருந்து வேகமாக ஓடுகின்றன.
இந்த குறிப்பை வைத்து, அங்கு உள்ள கண்ணிவெடி அகற்றப்படுகிறது. இதுவரை இவை ஒரு கண்ணிவெடிகளை கூட தவறவிட்டதில்லை என, இவற்றை கையாள்வோர் கூறியுள்ளனர்.