அவுஸ்திரேலியாவில் பலருக்கு ஆபத்தாக மாறியுள்ள எலி விஷம்
அவுஸ்திரேலியாவில் ஒருவகை எலி விஷம் கலந்த உணவை உட்கொண்டவர்கள் பாதிக்கப்பட்ட நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த குற்றச்சாட்டின் அடிப்படையில் குயின்ஸ்லாந்தில் ஐந்து பேர் கைது செய்யப்பட்ட நிலையில், காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
குறிப்பிட்ட பகுதியிலுள்ள ஒரே குடும்பத்தை சேர்ந்த ஐந்து பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் ஒரு குழந்தையும் உள்ளடக்குவதாக தெரிவிக்கப்படுகிறது.
கடந்த வாரம், எலி விஷத்தினால் பாதிக்கப்பட்டவர்கள் தனித்தனி மருத்துவமனைகளுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். சிகிச்சைக்குப் பின், இவர்கள் அனைவரும் பிராடிபாகம் (Brodifacoum) என்ற எலி விஷத்தில் காணப்படும் மூலப்பொருளை உட்கொண்டிருக்கலாம் என்று மருத்துவர்கள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
பிராடிபாகம், இரத்த உறைதலுக்குத் தேவையான விட்டமின் கே-யுடன் குறுக்கிட்டு இரத்தத்தை மெலிதாக்கும் தன்மை கொண்டது. இந்த நோயின் அறிகுறிகளாக அதிக இரத்தப்போக்கு, சுவாசிப்பதில் சிரமம் மற்றும் எளிதில் சிராய்ப்பு போன்ற தீவிரமான அறிகுறிகள் ஏற்படலாம் என தெரிவிக்கப்படுகிறது.
ஆபத்தான மூலக்கூறுகளை உட்கொள்வதில் மனித உயிர்களுக்கு ஆபத்தாக மாறலாம் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் குறித்து விசாரணைகள் இடம்பெற்று வருவதாக, குயின்ஸ்லாந்து சுகாதார அமைச்சர் டிம் நிக்கோல்ஸ் தெரிவித்துள்ளார்.





