இலங்கையில் அச்சுறுத்தும் எலிக்காய்ச்சல் – 10,000ற்கும் அதிகமானவர்கள் பாதிப்பு
இலங்கையில் எலிக்காய்ச்சல் காரணமாக இந்த வருடத்தின் இதுவரை 10,000ற்கும் அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என தொற்று நோய்த் தடுப்புப் பிரிவின் விசேட வைத்தியர் குமுது வீரகோன் தெரிவித்துள்ளார்.
கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் இந்த வருடம் குறித்த நோயாளர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
நிலவிவரும் மழையுடன் கூடிய காலநிலை மற்றும் பெரும்போக நெற்செய்கை ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் அடையாளம் காணப்படும் நோயாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக தொற்று நோய் பிரிவின் விசேட வைத்திய நிபுணர் குமுது வீரகோன்ன் தெரிவித்தார்.
கடந்த வருடம் மாத்திரம் நாடளாவிய ரீதியில் எலிக்காய்ச்சலால் பாதிப்புற்ற 9 ஆயிரம் பேர் அடையாளங்காணப்பட்டுள்ளதுடன் 200 பேர் உயிரிழந்தும் உள்ளனர். இரத்தினபுரி, குருநாகல், காலி, மாத்தறை, கொழும்பு ஆகிய மாவட்டங்களிலேயே அதிக நோயாளர்கள் கண்டறியப்பட்டுள்ளனர்.
10 தொடக்கம் 12 மாவட்டங்கள் அதி உயர் அபாயம் மிக்க பகுதிகளாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளன. இவ்வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் மாத்திரம் சுமார் 10 ஆயிரத்துக்கும் அண்ணளவான நோயாளர்கள் அடையாளங்காணப்பட்டுள்ளனர்.
நிலவிவரும் மழையுடன் கூடிய காலநிலை காரணமாக தொற்றாளர்களின் எண்ணிக்கையிலும் பாரிய அதிகரிப்பைக் காணக் கூடியதாக உள்ளது.