சீனாவில் குழந்தைகளிடையே வேகமாக பரவும் சுவாச தொற்று… இந்தியாவில் 6 மாகாணங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அவசர எச்சரிக்கை
சீனாவில் குழந்தைகளிடையே சுவாச நோய் பாதிப்பு வேகமாக அதிகரித்துவரும் நிலையில், இந்தியாவில் 6 மாகாணங்களுக்கு அவசர எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.குறித்த 6 மாகாணங்களில் சுவாச பிரச்சனைகள் குறித்து புகார் அளிக்கும் நோயாளிகளை அனுமதிக்கும் பொருட்டு தயார் நிலையில் இருப்பதை உறுதி செய்ய மருத்துவமனைகள் மற்றும் சுகாதார பணியாளர்களை இந்திய அரசாங்கம் கேட்டுக் கொண்டுள்ளது.
முதற்கட்டமாக ராஜஸ்தான், கர்நாடகா, குஜராத், உத்தரகாண்ட், ஹரியானா மற்றும் தமிழ்நாடு ஆகிய 6 மாகாணங்களுக்கு அவசர எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனிடையே, பருவகால காய்ச்சல் குறித்து பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு கர்நாடக சுகாதாரத் துறையும் கேட்டுக் கொண்டுள்ளது.மேலும், இருமல் அல்லது தும்மலின் போது வாய் மற்றும் மூக்கை மூடுதல், அடிக்கடி கைகளை கழுவுதல், முகத்தைத் தொடுவதைத் தவிர்த்தல் மற்றும் நெரிசலான இடங்களில் முகமூடிகளைப் பயன்படுத்துதல் உள்ளிட்ட பாதுகாப்பு அம்சங்களை பின்பற்றவும் கர்நாடக சுகாதாரத் துறை கேட்டுக்கொண்டுள்ளது.
இந்த நிலையில், டஹ்ற்போதைய சூழல் பயப்படும்படி இல்லை எனவும், ஆனால் சுகாதாரத் துறை கண்காணிப்பில் உள்ளதாகவும் ராஜஸ்தான் அரசாங்கம் பதிலளித்துள்ளது. அத்துடன் குழந்தைகள் பிரிவு மற்றும் பொது மருத்துவப் பிரிவுகளில் போதுமான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் விளக்கமளித்துள்ளது.குஜராத், உத்தரகாண்ட், ஹரியானா மற்றும் தமிழ்நாடு ஆகிய மாகாணங்களும் போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக தகவல் வெளியிட்டுள்ளது.
தமிழ்நாட்டில் இதுவரை சிறார் நிமோனியா பாதிப்பு எதுவும் பதிவாகவில்லை என்றாலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக விழிப்புடன் இருக்குமாறு அதிகாரிகள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளதாக மாநில சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.வட சீனாவில், குறிப்பாக குழந்தைகளிடையே சுவாச நோய்களின் எண்ணிக்கை அதிகரிப்பு, நாட்டில் கொரோனா பெருந்தொற்று பரவிய நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு கவலையைத் தூண்டியுள்ளது.
தற்போது அதிகரித்து வரும் நோய்த்தொற்றுகள் ஏற்கனவே அறியப்பட்ட வைரஸ்களின் கலவையாகும் என்றும் கடந்த டிசம்பரில் கடுமையான கொரோனா கட்டுப்பாடுகள் நீக்கப்பட்ட பின்னர் நாட்டின் முதல் முழு குளிர் காலத்துடன் இது தொடர்புடையது என்றும் சீன சுகாதார அதிகாரிகள் விளக்கமளித்துள்ளனர்.இருப்பினும் சீனாவின் தற்போதைய நிலையை உலக சுகாதாரத்துறை கண்காணித்து வருவதாகவே தகவல் வெளியிட்டுள்ளது.