நாட்டுக்கு ஆபத்தெனில் ரணில் களத்துக்கு வருவார்: ஐதேக அறிவிப்பு!
“நாடு விழும்பட்சத்தில் சவாலை ஏற்று அதனை நிர்வகிகக்கூடிய தலைவர் ரணில் விக்கிரமசிங்க மட்டுமே. எனவே, நாட்டுக்கு ஆபத்தெனில் அவர் பொறுப்பைவிட்டு ஓடும் நபர் கிடையாது.”
இவ்வாறு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சமன் ரத்னபிரிய தெரிவித்தார்.
புத்தாண்டை முன்னிட்டு முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்து, எதிரணி அரசியல் பிரமுகர்கள் வாழ்த்துகூறி ஆசிபெற்றனர்.
அதன்பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிட்ட சமன் ரத்ன பிரிய கூறியவை வருமாறு,
“தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்திடம் முறையான முகாமைத்துவம் இல்லை எனவும், இவ்வாறு முன்னோக்கி செல்ல முடியாது எனவும் ரணில் விக்கிரமசிங்க சுட்டிக்காட்டினார்.
நாடாளுமன்றத்துக்கு வரும் எண்ணம் ரணில் விக்கிரமசிங்கவுக்கு இல்லை. அவர் நாடாளுமன்றம் வரவேண்டும் என நாம் தான் வலியுறுத்திவருகின்றோம்.
நாடு விழும் பட்சத்தில், நாட்டை நிர்வகிக்ககூடிய ஒரே தலைவராக ரணில் விக்கிரமசிங்கவே இருக்கின்றார். எனவே, நாட்டுக்கு நெருக்கடி வந்தால் பொறுப்பை கைவிட்டு செல்லும் தலைவர் அல்லர் ரணில் விக்கிரமசிங்க.
அடுத்த தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தியும், ஐக்கிய தேசியக் கட்சியும் ஒன்றிணைந்தே போட்டியிடக்கூடும்.” – எனவும் சமன் ரத்நாயக்க குறிப்பிட்டார்.





