இலங்கையில் ரம்புட்டான், மங்குஸ்தான் தோல்களால் ஏற்பட்டுள்ள பாதிப்பு – மருத்துவர் எச்சரிக்கை

ரம்புட்டான், மங்குஸ்தான் பழங்களின் தோல்கள், டெங்கு நுளம்புகளுக்கான இனப்பெருக்கத்துக்கு ஏற்ற சூழலை உருவாக்கும் அபாயம் உள்ளதாக வைத்தியர் தீபால் பெரேரா எச்சரித்துள்ளார்.
பல்வேறு பகுதிகளில் இந்த பழங்களின் தோல்களை வீதியோரங்களில், வீடுகளின் பின்புறங்களில் அல்லது திறந்த வெளிகளில் அங்கிங்கித்தமாக வீசுவதை அவதானிக்க முடிகிறது. இது குறைந்த அளவிலான நீர்தேக்கம் ஏற்படுவதற்கும், அதன்வழி டெங்கு நுளம்புகள் இனப்பெருக்கத்திற்கு உகந்த சூழ்நிலையை உருவாக்குவதற்கும் காரணமாகிறது.
வைத்தியர் தீபால் பெரேரா இதுகுறித்து மேலும் கூறுகையில், டெங்கு நுளம்புகள் வளர சிறிதளவான நீர் இருந்தாலே போதுமானது. எனவே ரம்புட்டான், மங்குஸ்தான் போன்ற பழங்களின் தோல்களில் தேங்கும் சிறு நீர்நிலைகள் கூட, டெங்கு பரவலுக்கான தாக்கத்தை ஏற்படுத்தும் எனத் தெரிவித்தார்.
இந்த சூழ்நிலையை தடுக்கும் வகையில், பொதுமக்கள் இந்த தோல்களை சரியான முறையில் அகற்ற வேண்டும். வீதிகளில் அல்லது சாலையோரங்களில் பழ தோல்களை வீசுவது தவிர்க்கப்பட வேண்டும். இது வெறும் சுகாதாரப் பழக்கமாக மட்டும் இல்லாமல், நோய் பரவலை தடுக்கும் பொறுப்பான செயற்பாடாகவும் பார்க்கப்பட வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.
அரசாங்கமும், உள்ளூராட்சி நிறுவனங்களும் இதுபோன்ற கழிவுகள் தேங்காமல் போக்க நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். அதேசமயம், பொதுமக்களும் விழிப்புணர்வுடன் நடந்து கொள்ள வேண்டும் என்பது வைத்தியர் தீபால் பெரேராவின் வேண்டுகோளாகும்.