ராஜீவ் காந்தி கொலை குற்றவாளிகள் நாளை இலங்கை அழைத்துவரப்படுகின்றனர்
இந்தியாவின் முன்னாள் பிரதமர் ரஜீவ் காந்தி கொலையுடன் தொடர்புடைய முருகன், ரொபர்ட் பயஸ் மற்றும் ஜெயகுமார் ஆகியோர் நாளை காலை நாட்டுக்கு அழைத்துவரப்படவுள்ளனர்.
அவர்கள் சார்பில் வழக்குகளில் முன்னிலையான தமிழக சட்டத்தரணி புகழேந்தி இதனை உறுதிப்படுத்தினார்.
இதன்படி நாளை முற்பகல் 10 மணியளவில் சென்னை விமான நிலையத்திலிருந்து அவர்கள் இலங்கை நோக்கி பயணிக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அவர்களுக்கு இலங்கைக்கு செல்வதற்கு மாத்திரமே இந்தியாவிலுள்ள இலங்கை துணை உயர்ஸ்தானிகரகம் கடவுச்சீட்டு வழங்கியுள்ளதாகவும் சட்டத்தரணி புகழேந்தி தெரிவித்தார்.
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 33 ஆண்டுகள் வரையில் சிறையில் இருந்த குறித்த அனைவரும் 2022 ஆம் ஆண்டு விடுதலை செய்யப்பட்ட நிலையில், திருச்சி சிறப்பு முகாமில் தடுத்துவைக்கப்பட்டனர்.
இதில் சாந்தன் நோய்வாய்ப்பட்ட நிலையில், கடந்த ஜனவரி மாதம் சென்னை ராஜீவ்காந்தி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், கடந்த மாதம் உயிரிழந்தார்.
இந்நிலையில், ஏனைய மூவரையும் விரைவில் இலங்கைக்கு அனுப்ப வேண்டும் என்ற கோரிக்கை வலுப்பெற்ற நிலையில், அவர்களை சொந்த நாட்டிற்கு அனுப்பி வைப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருந்தன.
இதன்படி மூவரும் இலங்கைக்கு அழைத்துவரப்பட்ட உள்ளமை குறிப்பிடத்தக்கது.