அமெரிக்காவில் ராகுல் காந்திக்கு உற்சாக வரவேற்பு
மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும் காங்கிரஸ் எம்.பி.யுமான ராகுல் காந்தி மூன்று நாள் பயணமாக அமெரிக்கா சென்றடைந்தார்.
இந்திய – அமெரிக்க உறவை மேலும் வலுப்படுத்த அவர் பேச்சுவார்த்தை நடத்த இருக்கிறார்.
இதுகுறித்து தனது முகநூல் பக்கத்தில், “அமெரிக்காவின் டெக்சாஸில் உள்ள டல்லாஸ் நகரில் உள்ள புலம்பெயர்ந்த இந்தியர்கள் மற்றும் இந்தியன் ஓவர்சீஸ் காங்கிரஸ் உறுப்பினர்கள் அளித்த உற்சாகமான வரவேற்பில் நான் மிகவும் மகிழ்ச்சியடைந்தேன்” என பதிவிட்டுள்ளார்.
இந்தப் பயணத்தின் போது, இருநாடுகளுக்கு இடையேயான உறவுகளை மேலும் வலுப்படுத்துவதற்கு பேச்சுவார்த்தைகள் மற்றும் நுண்ணிய உரையாடல்கள் நடத்துவதை ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் கட்சி அதன் எக்ஸ் தளபக்கத்தில் , “‘டெக்சாஸின் டல்லாஸில் உள்ள ஃபோர்ட் வொர்த் சர்வதேச விமானநிலையத்தில் புலம்பெயர்ந்த இந்தியர்கள் மற்றும் இந்தியன் ஓவர்சீஸ் காங்கிரஸ் உறுப்பினர்களால் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது” என்று பதிவிட்டுள்ளது.
இதனிடையே, கடந்த வாரத்தில் பேசிய இந்தியன் ஓவர்சீஸ் காங்கிரஸின் தலைவர் சாம் பிட்ரோடா கூறுகையில், “மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் அலுவல் நிமித்தமாக அமெரிக்கா வரவில்லை என்றாலும் கேபிடோல் ஹில்லில் உள்ள பல்வேறு தரப்பட்ட மக்களுடன் தனிப்பட்ட முறையில் அவர் பேச்சுவார்த்தை நடத்த வாய்ப்பிருக்கிறது.
8 -10ம் தேதி வரையிலான மூன்று நாள் பயணத்தில் ராகுல் காந்தி, ஜார்ஜ் டவுண் பல்கலை மற்றும் டெக்சாஸ் பல்கலை உள்ளிட்டு வாஷிங்டன் டி.சி. மற்றும் டல்லாஸில் பல்வேறு உரையாடல்களை நடத்துகிறார்.