கதிரியக்க தொழில்நுட்பவியலாளர்கள் நாளை நாடு தழுவிய பணிப்புறக்கணிப்பு
அரசாங்க கதிரியக்க தொழில்நுட்ப வல்லுநர்கள் சங்கம் நாளை காலை 8 மணி முதல் நாடு தழுவிய ரீதியில் தொடர் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபடவுள்ளது.
இதனால் கதிரியக்க பரிசோதனைகள் (X-ray), CT பரிசோதனைகள், MRI பரிசோதனைகள், மார்பகப் புற்றுநோய் கண்டறிதலுக்கான மமோகிராம் (Mammogram) பரிசோதனைகள் உள்ளிட்ட அனைத்து கதிரியக்க சேவைகளும் ஸ்தம்பிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
மாளிகாவத்தை வைத்தியசாலையில் தகுதியற்ற பணியாளர்கள் மூலம் கதிரியக்கப் பரிசோதனைகள் முன்னெடுக்கப்படுவதை எதிர்த்தும், நோயாளர் பாதுகாப்பை வலியுறுத்தியும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கடந்த 21ஆம் திகதி நடத்தப்பட்ட ஒரு நாள் போராட்டத்திற்கு அதிகாரிகள் தீர்வு வழங்கத் தவறியதால், இந்தப் போராட்டம் தீவிரப்படுத்தப்படுவதாகச் சங்கத்தின் தலைவர் சானக தர்மவிக்ரம தெரிவித்தார்.
தகுதியுள்ள வல்லுநர்கள் மட்டுமே இப்பணிகளில் ஈடுபடுவதை அதிகாரிகள் உறுதிப்படுத்தும் வரை, இந்தப் பணிப்பகிஷ்கரிப்பு தொடரும் என அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.





