Site icon Tamil News

ஆஸ்திரேலியாவில் சீக்கியர் மீது இனவெறி தாக்குதல்

ஆஸ்திரேலியாவில் சீக்கியர் ஒருவருக்கு எதிராக தொடர்ந்து இனவெறி தாக்குதல் நடத்தப்பட்டு வருவது அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது.

ஆஸ்திரேலியாவில் உள்ள தாஸ்மானியாவில் ஹோபர்ட் பகுதியில் உணவு விடுதி ஒன்றை வைத்து ஜர்னைல் சிங் என்னும் சீக்கியர் நடத்தி வருபவர். இவர் மீது கடந்த 2 முதல் 3 மாதங்களாகத் தொடர்ந்து இனவெறி தாக்குதல் நடத்தப்படுகிறது.

இது குறித்துப் பேசிய ஜர்னைல் சிங், ‘முன்பு ஒருபோதும் இதுபோன்று எனக்கு நடந்தது இல்லை. கடந்த இரண்டு, மூன்று மாதங்களாகவே தொடர்ந்து பல்வேறு முறை இனவெறி தாக்குதல் நடத்தப்படுகிறது. இந்த தாக்குதல் சொந்த நாட்டுக்கு செல்லும்படியும், காரில் நாயின் கழிவுகளை கொட்டியும் தொடர்கிறது

மனரீதியாக இது பெரிய அழுத்தம் ஏற்படுத்துகிறது. கடந்த 4 முதல் 5 நாட்களாக எனது வீட்டுக்கு வெளியே காரின் கதவு கைப்பிடியில் நாயின் கழிவுகளைப் பூசிவிட்டுச் சென்றனர்.

மேலும் இனவெறியைத் தூண்டும் வகையில் கார் நிறுத்தும் பகுதியில் சுவரின் மீது, இந்தியனே, சொந்த நாட்டுக்குச் செல் என்ற வாசகங்கள் எழுதப்பட்டு இருந்தன. காவல்துறையிடம் இது குறித்து புகார் அளித்தும் காணொளி சான்று இல்லாமல், இதன் பின்னணியில் உள்ளவர்கள் மீது நடவடிக்கை எடுக்க முடியாத நிலை உள்ளது’ எனக் கூறியுள்ளார்.

கடந்த 15 ஆண்டுகளாக ஆஸ்திரேலியாவில் வசித்து வரும் அவர், 10 ஆண்டுகளாக தாஸ்மானியாவில் உள்ளார். அவருக்குத் தொடர்ந்து, இரு முறை இனவெறி மற்றும் மிரட்டல் கடிதங்களும் வந்துள்ளன. அவரது காருக்கு சேதம் ஏற்படும் என்று மிரட்டலும் விடப்பட்டு உள்ளது.

தாஸ்மானியா காவல் துறை உயரதிகாரி ஜேசன் எல்மர் இந்த சம்பவம் பற்றி விசாரணை செய்து வருவதாகத் தெரிவித்துள்ளார்.

Exit mobile version