குவாட் தலைவர்கள் உச்சி மாநாடு 2026 இல்!
குவாட் அமைப்பில் அங்கம் வகிக்கும் நாடுகளின் தலைவர்கள் பங்கேற்கும் உயர்மட்டக் கூட்டம் அடுத்த வருடம் முற்பகுதியில் நடைபெறக்கூடும் என்று ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோனி அல்பானீஸி தெரிவித்தார்.
குறித்த உச்சி மாநாடு இவ்வருட இறுதியில் இந்தியாவில் நடைபெறும் என முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்தது. எனினும், அங்கத்துவ நாடுகளின் தலைவர்களுக்கு இவ்வருடத்தில் முக்கியத்துவமிக்க சந்திப்பு இருப்பதால் கூட்டம் பிற்போடப்பட்டுள்ளது என தெரியவருகின்றது.
குவாட் அமைப்பில் அமெரிக்கா, இந்தியா, ஜப்பான் மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள் அங்கம் வகிக்கின்றன. இது சீனாவின் ஆதிக்கத்தை கட்டுப்படுத்துவதற்குரிய கூட்டணியெனக் கருதப்படுகின்றது.
மலேசியாவில் நடைபெற்ற ஆசியான் மாநாட்டில் அமெரிக்க ஜனாதிபதி, ஆஸ்திரேலியா பிரதமர் உள்ளிட்டவர்கள் பங்கேற்றனர். அங்கிருந்து தற்போது தென்கொரியா சென்றுள்ளனர்.
ஆசிய நாடான தென் கொரியாவின் ஜியாங்ஜு நகரில், ஆசிய – பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு அமைப்பின் உச்சி மாநாடு நடைபெறவுள்ளது. இதில் பங்கேற்பதற்காகவே இவர்கள் தென்கொரியா சென்றுள்ளனர்.
தென்கொரியாவில் முக்கியத்துவமிக்க சந்திப்புகள் இடம்பெறவுள்ளன. அமெரிக்க மற்றும் சீன ஜனாதிபதிகளுக்கிடையிலான சந்திப்பு இன்று இடம்பெறவுள்ளது.





