ஐ.நா விதித்த தடையை மீறி அதிபர் கிம்-ற்கு ரஷ்யாவில் தயாரிக்கப்பட்ட சொகுசு காரை பரிசளித்த புதின்
வட கொரியாவுக்கு எதிராக ஐ.நா விதித்த தடையை மீறி ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், வடகொரிய அதிபர் கிம் ஜான் உன்னுக்கு ரஷ்ய தயாரிப்பான சொகுசுக் கார் ஒன்றினை பரிசளித்துள்ளார்.
வடகொரிய தலைவர் கிம் ஜாங் உன்னுக்கு ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், ரஷ்ய தயாரிப்பான சொகுசுக் கார் ஒன்றினை பரிசாக அளித்துள்ளதாக, பியாங்யாங்கின் அரசு ஊடகம் இன்று(20) அறிவிப்பு வெளியிட்டுள்ளது. சுற்றுலா முதல் பாதுகாப்பு வரையிலான துறைகளில் இரு நாடுகள் மத்தியில் மேம்பட்டு வரும் உறவுகளின் அங்கமாக இந்த அன்பு பரிசு வழங்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.
ஆனால், அணு ஆயுதங்களை குவித்து வைத்துக்கொண்டு சண்டித்தனம் செய்யும் வடகொரியாவுக்கு கடிவாளம் இடும் வகையில், அந்நாட்டுக்கு ஐ.நா விதித்துள்ள தடையை புதினின் பரிசு தற்போது உடைத்துள்ளது. அதிலும் ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில் இடம்பெற்றிருக்கும் ரஷ்யாவின் இந்த செயல் சர்வதேச அளவில் சர்ச்சைக்கும் வழி செய்திருக்கிறது.
ரஷ்ய அதிபரின் அன்பு பரிசை உறுதி செய்திருக்கும் கிம்மின் சகோதரியும், அவருக்கு அடுத்த நிலையில் வடகொரியாவை வழி நடத்துபவருமான யோ ஜாங், “இந்த பரிசு இரு நாட்டு அதிபர்களின் தனிப்பட்ட சிநேகத்தின் அடையாளம்” என புகழ்ந்திருக்கிறார். கடந்த செப்டம்பர் மாதம் ரஷ்யாவின் தூர கிழக்கே ரகசிய இடத்தில் நடந்த கிம் – புடின் சந்திப்பை அடுத்து, வடகொரியாவின் செயற்கைக்கோள் திட்டங்களுக்கு ரஷ்யாவின் தொழில்நுட்ப உதவிகளும், உக்ரைன் மீதான ரஷ்யாவின் போருக்கு வடகொரியாவின் ஆயுதங்களும் பரஸ்பரம் பரிமாறப்பட்டு வருகின்றன.
மேலும், ரஷ்யாவுக்கு கிம் பயணித்ததன் தொடர்ச்சியாக, வட கொரியாவுக்கு புதின் விரைவில் வருகை தர இருக்கிறார். அவருக்கு முன்பாக ரஷ்யாவின் அன்பு பரிசு தற்போது வட கொரியாவுக்கு வந்திருக்கிறது. கிம் ஜாங் உன் ஆடம்பரமான ஆட்டோமொபைல் பயன்பாடுகளில் ஆர்வம் கொண்டவர். லெக்ஸஸ் எஸ்யூவி மற்றும் மெர்சிடிஸ் பென்ஸ் எஸ்-கிளாஸ் மாடல் உட்பட உலகின் முன்னணி சொகுசுக் கார்கள் அவரது போர்டிகோவை அலங்கரித்துள்ளன.
ரஷ்ய விஜயத்தின்போது புதினின் ஆரஸ் செனட் எனப்படும், உலகின் மிகப்பெரும் சொகுசு மற்றும் பாதுகாப்பு அம்சங்கள் அடங்கிய காரின் பின் இருக்கையில் அமரவைத்து கிம் அழைத்து செல்லப்பட்டார். அந்த கார் குறித்து கிம் அதிகம் விசாரித்ததில் அவரது உள்ளக்கிடக்கையை உணர்ந்த புதின், தற்போது திடீர் பரிசாக அதே கார் ஒன்றினை கிம்முக்கு என பிரத்யேகமாக வடிவமைத்து அனுப்பியுள்ளார்.
ரஷ்யா – வடகொரியா இடையிலான இந்த குலாவலுக்கு தென்கொரியா தனது எரிச்சலை வெளிப்படுத்தி உள்ளது. தென்கொரியாவின் ஒருங்கிணைப்பு அமைச்சக அதிகாரி அளித்த பேட்டியில், “ஐ.நா தடையை மீறியதை பகிரங்கமாக வெளிப்படுத்தும் வெட்கக்கேடான அணுகுமுறைக்காக வட கொரியாவை நாங்கள் கண்டிக்கிறோம். ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் நிரந்தர உறுப்பினராக ரஷ்யா தனது பொறுப்பை உணர்ந்து செயல்பட வேண்டும்” என்று சீற்றம் தெரிவித்துள்ளார்.