பஞ்சாப் கிங்ஸ் – மும்பை இண்டியன்ஸ் ஆட்டம் இடமாற்றம்?

ஹிமாசல பிரதேச மாநிலம், தா்மசாலாவில் உள்ள விமான நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டதை அடுத்து, வரும் ஞாயிற்றுக்கிழமை அங்கு நடைபெற வேண்டிய பஞ்சாப் கிங்ஸ் – மும்பை இண்டியன்ஸ் ஆட்டம் இடமாற்றம் செய்யப்பட வாய்ப்பு இருப்பதாகத் தெரிகிறது.
ஜம்மு & காஷ்மீரின் பஹல்காமில் நிகழ்த்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடியாக, இந்திய ராணுவம் பாகிஸ்தான் பகுதியில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது புதன்கிழமை அதிகாலை அதிரடியாக தாக்குதல் நடத்தியது. இதைத் தொடா்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, இந்தியாவின் வடக்கு மற்றும் மேற்கு பகுதிகளில் இருக்கும் சுமாா் 18 விமான நிலையங்கள் தற்காலிகமாக மூடப்பட்டன.
அதில் தா்மசாலா விமான நிலையமும் அடங்கும். இந்நிலையில், பஞ்சாபுடன் ஞாயிற்றுக்கிழமை மோதுவதற்காக மும்பை அணி மற்றும் தொழில்நுட்பக் குழுவினா் தா்மசாலா வரவேண்டியுள்ளது. பதற்றமான சூழல் காரணமாக தா்மசாலா விமான நிலையம் தொடா்ந்து மூடப்படுவதாக இருந்தால், அவா்கள் தா்மசாலாவுக்கு பயணிப்பதில் சிக்கல் ஏற்படும்.
எனவே, பஞ்சாப் – மும்பை மோதும் ஆட்டத்தை மும்பைக்கு மாற்றம் செய்ய வாய்ப்பு இருப்பதாகவும், இதுதொடா்பாக பிசிசிஐயின் முடிவுக்காக காத்திருப்பதாகவும் பஞ்சாப் அணி வட்டாரங்கள் தெரிவித்தன.