இலங்கையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டிருந்த பகுதி மக்களுக்கு சுகாதார பிரிவின் எச்சரிக்கை
இலங்கையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டிருந்த பகுதிகளிலுள்ள மக்கள் அவதானம் செலுத்த வேண்டும் எனச் சுகாதாரப் பிரிவு அறிவித்துள்ளது.
வெள்ளப்பெருக்கு ஏற்பட்டிருந்த பகுதிகளில் தொற்று நோய்கள் பரவும் அபாயம் குறித்து அவதானமாக இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளிலுள்ள கிணற்று நீரைப் பயன்படுத்துவது தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கிணற்றை சுத்தப்படுத்தும்போது பொதுச் சுகாதார பரிசோதகரின் அறிவுறுத்தல்களைப் பின்பற்றுவது சிறந்தது எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதேநேரம், சமைத்த உணவை ஈ போன்ற நோய் காவிகளிடமிருந்து பாதுகாக்க வேண்டும் எனவும், நன்கு கொதித்தாறிய நீரைப் பருக வேண்டும் எனவும் சுகாதாரப் பிரிவு தெரிவித்துள்ளது.
விசேடமாக வயிற்றுப்போக்கு, டெங்கு, எலிக்காய்ச்சல், வைரஸ் நோய்கள் இந்தக் காலத்தில் அதிகளவில் பரவி வருவதாகவும் சுகாதாரப் பிரிவு எச்சரித்துள்ளது.