ஷானி அபேசேகரவுக்கு போதிய பாதுகாப்பை வழங்குங்கள்!! நீதிமன்றம் உத்தரவு

உயிருக்கு ஆபத்து இருப்பதாக கூறப்படும் குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் ஷானி அபேசேகரவுக்கு போதிய பாதுகாப்பை வழங்க உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் பாதுகாப்பு அதிகாரிகளுக்கு இன்று உத்தரவிட்டுள்ளது.
உயிருக்கு அச்சுறுத்தல் உள்ள தமக்கு போதிய பாதுகாப்பை வழங்குமாறு பாதுகாப்பு அதிகாரிகளுக்கு உத்தரவிடுமாறு கோரி குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் ஷானி அபேசேகர தாக்கல் செய்த ரிட் மனு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவர் நீதியரசர் நிஷங்க பந்துல கருணாரத்ன மற்றும் விக்கும் களுஆராச்சி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்னிலையில் இந்த மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
மனுதாரரின் பாதுகாப்பு தொடர்பில் சமர்ப்பிக்கப்பட்ட புலனாய்வுத் தகவல்கள் அடங்கிய அறிக்கை, தேவையான நடவடிக்கைகளுக்காக பொது பாதுகாப்பு அமைச்சின் செயலாளருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக பிரதிவாதிகள் சார்பில் ஆஜரான மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் ரொஹந்த அபேசூரிய நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
இது தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்க ஒரு மாத கால அவகாசம் வழங்குமாறும் மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் நீதிமன்றத்திடம் கோரியுள்ளார்.
அப்போது, மனுதாரர் ஷானி அபேசேகர சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி உபுல் ஜயசூரிய, ஒரு மாத காலத்திற்குப் பின்னர் தனது கட்சிக்காரருக்கு என்ன நடக்கும் என்பதை நினைத்துப் பார்க்க முடியாது என நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
தனது மனுதாரருக்கு ஒரு பொலிஸ் உத்தியோகத்தரும் ஒரு மோட்டார் சைக்கிளும் மாத்திரமே பாதுகாப்புக்காக வழங்கப்பட்டுள்ளதாகவும், அது அவரது பாதுகாப்புக்கு போதாது எனவும் ஜனாதிபதியின் சட்டத்தரணி தெரிவித்தார்.
முன்வைக்கப்பட்ட உண்மைகளை பரிசீலித்த மேன்முறையீட்டு நீதிமன்ற பெஞ்ச், மனுவை மீண்டும் ஜனவரி 18ஆம் திகதி கூட்டுமாறு உத்தரவிட்டது.
அன்றைய தினம் வரை தற்போது வழங்கப்பட்டுள்ள பாதுகாப்பிற்கு மேலதிகமாக போதிய பாதுகாப்பை வழங்க நடவடிக்கை எடுக்குமாறு பாதுகாப்பு அதிகாரிகளுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.