விபுலானந்த அழகியற் கற்கைகள் மாணவர்கள் தொடர் போராட்டம்: 8 பேர் வைத்தியசாலையில்
மட்டக்களப்பு சுவாமி விபுலானந்த அழகியற் கற்கைகள் நிறுவகத்தில் விரிவுரையாளர் ஒருவரை மாற்றக்கோரி மாணவர்கள் முன்னெடுத்து வரும் போராட்டம் தீவிரமடைந்துள்ளது.
விரிவுரையாளர் ஒருவரின் முறையற்ற நடத்தை மற்றும் உடல் ரீதியான கேலி கிண்டல்களுக்கு எதிராக கடந்த புதன்கிழமை ஆரம்பிக்கப்பட்ட இந்த போராட்டம் இன்று மூன்றாவது நாளாகவும் நீடிக்கின்றது.
கடும் மழை மற்றும் குளிரையும் பொருட்படுத்தாது இரவு பகலாக மாணவர்கள் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.
இதில் மயக்கமடைந்த மற்றும் வாந்தி எடுத்த நிலையில் 8 மாணவர்கள் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
நிர்வாகத்திடம் பலமுறை முறையிட்டும் உரிய தீர்வு கிடைக்காத நிலையில், தமது கோரிக்கைகள் நிறைவேறும் வரை போராட்டத்தைக் கைவிடப்போவதில்லை என மாணவர்கள் உறுதியாகத் தெரிவித்துள்ளனர்.





