மட்டக்களப்பு மாவட்ட பிரதி விவசாய பணிப்பாளரின் இடமாற்றத்தினை இடைநிறுத்துமாறு வலியுறுத்தி போராட்டம்!
மட்டக்களப்பு மாவட்ட பிரதி விவசாய பணிப்பாளரின் இடமாற்றத்தினை இடைநிறுத்துமாறு வலியுறுத்தியும் புதிய பிரதி விவசாய பணிப்பாளரின் நியமனத்தினை நிறுத்துமாறு வலியுறுத்தியும் இன்று (27.12) விவசாயிகளினால் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
மட்டக்களப்பு மாவட்ட பிரதி விவசாய பணிப்பாளர் அலுவலகத்திற்கு முன்பாக இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. மட்டக்களப்பு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் இருந்து வருகை தந்திருந்தனர்.
மட்டக்களப்பு மாவட்டத்தின் விவசாயத்துறையில் தங்களது தேவைப்பாடுகளை சிறப்பான முறையில் தற்போதைய பிரதி விவசாயப்பணிப்பாளர் பேரின்பராஜா பூர்த்திசெய்துவந்துள்ளதுடன் தங்களுக்கு சிறந்த ஆலோசனைகளையும் செய்துவருவதாகவும் புதிய பிரதிப்பணிப்பாளர் நியமனம் செய்யப்படுதலானது தமது விவசாய செயற்பாடுகளுக்கு அதுபாதிப்பாக அமையும் எனவும் இதன்போது போராட்டத்தில் கலந்துகொண்டவர்கள் தெரிவித்தனர்.
தற்போதைய மட்டக்களப்பு பிரதி விவசாய பணிப்பாளரின் சேவை எமக்கு தேவை, இடமாற்றத்தினை இரத்துச்செய், விவசாயத்தை தழைக்கச்செய்ய வழிவிடுங்கள், உயர் அதிகாரிகளே ஊமையாகாதீர்கள், கௌரவ ஆளுனரே உதவி செய்யுங்கள் போன்ற கோரிக்கைகள் அடங்கிய பதாகைகளை ஏந்தியவாறு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
கிழக்கு மாகாண ஆளுனர் தலையிட்டு பிரதிப்பணிப்பாளரின் இடமாற்றத்தினை இரத்துச்செய்து விவசாயிகளுக்கு உதவுமாறும் இதன்போது வேண்டுகோள் விடுக்கப்பட்டது.