இலங்கை முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்பு: அரசு விளக்கம்
முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்பு குறைக்கப்பட்டுள்ளதாக அண்மைக்காலமாக கூறப்படுகின்ற கூற்றை மறுத்துள்ள அரசாங்கப் பேச்சாளர் அமைச்சர் விஜித ஹேரத், அவ்வாறான எந்த நடவடிக்கையும் இதுவரை எடுக்கப்படவில்லை என தெரிவித்துள்ளார்.
அமைச்சரவைக்கு பின்னரான வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றிய அமைச்சர் ஹேரத், இந்த விடயம் தொடர்பில் ஆராய்வதற்காக குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாகவும், அறிக்கை வழங்கப்பட்டதன் பின்னர் அமைச்சரவை இது தொடர்பில் தீர்மானம் எடுக்கும் எனவும் தெரிவித்தார்.
இது தொடர்பில் அரசாங்கம் நியாயமான பரிசீலனையுடன் முடிவெடுக்கும் எனவும் முன்னாள் அரச தலைவர்களுக்கு தேவையான பாதுகாப்பு விவரங்களை மாத்திரம் வழங்குவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் பாதுகாப்பு குறைக்கப்பட்டுள்ளதாக அண்மையில் தெரிவித்திருந்த கூற்றுக்கு பதிலளித்த அமைச்சர் ஹேரத், அவ்வாறானதொரு தீர்மானம் எடுக்கப்படவில்லை எனவும் அவரது கூற்றுக்கள் பொய்யானவை எனவும் தெரிவித்தார்.
தற்போது அவருக்கு 57 பணியாளர்கள் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
முன்னாள் ஜனாதிபதிகளுக்கு தலா 100 க்கும் மேற்பட்ட பாதுகாப்புப் பணியாளர்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும், அத்துடன் பல்வேறு வாகனங்கள் மற்றும் அம்புலன்ஸ்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும் அரசாங்கப் பேச்சாளர் சுட்டிக்காட்டினார்.
அரசாங்கம் ரூ.1,100 மில்லியன் இந்த சேவையை பராமரிக்க வருடாந்தம் ஒதுக்கீடு செய்வதாக தெரிவித்தார். எந்த ஒரு அரசு நிறுவனத்திற்கும் கூட இதுபோன்ற ஒதுக்கீடு செய்யப்படவில்லை என்றும் அவர் கூறினார்.
அந்தவகையில், முன்னாள் ஜனாதிபதிகளுக்கு வழங்கப்பட்டுள்ள பாதுகாப்பில் மாற்றம் தேவை என அரசாங்கம் கருதுவதாக அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.