உத்தேச விளையாட்டு பல்கலைக்கழகம் விரைவில் ஸ்தாபிக்கப்படும் – இராஜாங்க அமைச்சர்
விளையாட்டுத்துறையில் நிபுணத்துவம் பெற்ற இளங்கலை பட்டதாரிகளுக்கு பட்டப்படிப்பை நிறைவு செய்வதற்கான வாய்ப்பை வழங்கும் வகையில் உத்தேச விளையாட்டு பல்கலைக்கழகத்தின் செயற்பாடுகளை துரிதப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார இராஜாங்க அமைச்சர் ரோஹண திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
டயகம மஹிந்த ராஜபக்ஷ விளையாட்டு வளாகத்தை மேம்படுத்துவதன் மூலம், விளையாட்டுப் பல்கலைக்கழகத்தை நிர்மாணிக்க உத்தேசித்துள்ளதாகவும், இது உள்ளூரிலும் பாடசாலை மட்டத்திலும் சிறந்த விளையாட்டு வீரர்களை அங்கீகரித்து அவர்களின் திறமைகளை முன்னேற்றுவதற்குத் தேவையான வசதிகளை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஜனாதிபதி ஊடக மையத்தில் (PMC) நேற்று வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 11) நடைபெற்ற ‘நிலையான நாட்டிற்கான கூட்டுப் பாதை’ என்ற தொனிப்பொருளில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இந்தக் கருத்துக்களை வெளியிட்டார்.
சர்வதேச விளையாட்டுப் போட்டிகளுக்கான விளையாட்டு வீரர்களைத் தெரிவு செய்வதில் அரசியல் தலையீடுகள் இருப்பதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளுக்கு முற்றுப்புள்ளி வைத்து, தேசிய விளையாட்டுப் பேரவை ஸ்தாபிக்கப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
அனுபவம் வாய்ந்த விளையாட்டு வீரர்கள் மற்றும் அனுபவம் வாய்ந்த நிபுணர்களை உள்ளடக்கிய புதிய தேசிய விளையாட்டு கவுன்சில், நாட்டில் வலுவான விளையாட்டு கலாச்சாரத்தை வளர்ப்பதற்கு பங்களிக்கும் என்று அவர் உறுதியளித்தார்.
தேசிய இளைஞர் விளையாட்டு விழா மற்றும் ‘துருணு சக்தி’ நிகழ்ச்சித் திட்டத்தை மீள ஆரம்பிக்க நடவடிக்கை எடுப்பதாகவும் திஸாநாயக்க உறுதியளித்தார்.