சரியான அறிவித்தல்கள் விவசாயிகளுக்கு வழங்கப்படவில்லை – அமைச்சரின் குற்றச்சாட்டு!
இம்முறை பருவத்தில் கடும் வரட்சியை எதிர்நோக்க நேரிடும் என்ற செய்தியை விவசாயிகளுக்கு வழங்காமல் இருந்தமைக்கு சம்பந்தப்பட்ட அனைத்து திணைக்களங்களும் பொறுப்பேற்க வேண்டுமென விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
இந்த ஆண்டுக்கான பருவத்தில் கடும் வரட்சியை எதிர்நோக்க வேண்டியுள்ளதாகவும், தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்துமாறும் எந்தவொரு துறையிலிருந்தும் விவசாயிகளுக்கு அறிவித்தல் விடுக்கப்படவில்லை எனவும் அமைச்சர் வலியுறுத்தியுள்ளார்.
இதனால் விவசாயிகள் அதிக அளவில் நெற்பயிர்களை பயிரிட நடவடிக்கை எடுத்துள்ளனர். எனவே அந்த மக்களுக்கு விவசாய அமைச்சினால் உர விநியோகத்திற்காக பெருமளவிலான நிதி மானியம் வழங்க நடவடிக்கை எடுப்பதில் அரசாங்கத்திற்கும் பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
வறட்சி மற்றும் நீர் பற்றாக்குறை குறித்து விவசாயிகளுக்கு அறிவிக்காதமைக்கு விவசாய திணைக்களம், நீர்ப்பாசன திணைக்களம், மகாவலி அதிகார சபை, வளிமண்டலவியல் திணைக்களம் உள்ளிட்ட அனைத்து திணைக்களங்களும் பொறுப்பேற்க வேண்டும் என விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.