இலங்கையில் மருந்துப் பற்றாக்குறைக்கு தீர்வு காண்பதில் நிலவும் சிக்கல்கள்!
இலங்கையில் மருந்து பற்றாக்குறைக்கு தீர்வு காணும் முயற்சிகளில் தற்போதுள்ள சில சட்டங்கள் தடையாக இருப்பதாக சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சர் டாக்டர் நளிந்த ஜயதிஸ்ஸ கூறியுள்ளார்.
அந்த சட்டங்களை மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் மாற்றுவது சிக்கலாக தோன்றினாலும், இது தொடர்பான சில சட்டங்களும் விதிமுறைகளும் புதியவை அல்ல எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கொழும்பு தேசிய மருத்துவமனை வளாகத்தில் அமைந்துள்ள விபாசி பௌத்த மையத்தைத் திறந்து வைக்கும் நிகழ்வில் பங்கேற்று உரையாற்றிய போதே அமைச்சர் இந்த கருத்துக்களை முன்வைத்தார்.
தற்போதைய சட்டங்கள் பிரித்தானியரின் ஆட்சிக் காலத்திலிருந்தே நடைமுறையில் உள்ளன என்றும் அமைச்சர் கூறினார்.
தற்போதுள்ள சட்டங்களையும் விதிமுறைகளையும் மாற்றுவதற்கான முயற்சிகள் ஒன்றுக்கொன்று தொடர்புடையவை என்பதால் அவற்றை மிகவும் கவனமாகச் செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.
நாட்டில் தற்போதுள்ள சில சட்டங்களைப் பின்பற்றுவதன் மூலமும், சுகாதார சேவையைப் பராமரிக்க நேரம் ஒதுக்குவதன் மூலமும் சில அவசரப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண முடியாது என்றும் அமைச்சர் கூறியுள்ளார்.





