சிறை கைதிகள் விடுதலை விவகாரம் : வெளிப்படை தன்மையின்றி செயற்படும் வெனிசுலா!
வெனிசுலாவில் தடுத்து வைக்கப்பட்டிருந்த பல அமெரிக்கர்கள் விடுதலை செய்யப்படுவார்கள் என அமெரிக்க வெளியுறவுத்துறை உறுதிப்படுத்தியுள்ளது.
வெனிசுலாவின் தேசிய சட்டமன்றத் தலைவர், ‘அமைதியைத் தேடுவதற்கான’ ஒரு அடையாளமாக கணிசமான கைதிகள் விடுதலை செய்யப்படுவார்கள் என முன்னதாக தெரிவித்திருந்தார்.
இதற்கமைய மனித உரிமைகள் குழுவான ஃபோரோ பெனல் (Foro Penal) 56 அரசியல் கைதிகள் விடுவிக்கப்பட்டதை உறுதிப்படுத்தியது.
இருப்பினும் வெனிசுலாவின் அரசாங்கம் ஆதாரங்களை முன்வைக்காமல் 400 கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது. இது அரசாங்கத்தின் வெளிப்படை தன்மை குறித்த சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இதேவேளை கடந்த ஜுலை மாதம் ட்ரம்ப் நிர்வாகத்தின் குடியேற்ற ஒடுக்குமுறையின் கீழ், அமெரிக்காவால் நாடு கடத்தப்பட்ட புலம்பெயர்ந்தோருக்கு ஈடாக, வெனிசுலா சிறையில் அடைக்கப்பட்டிருந்த 10 அமெரிக்க கைதிகள் விடுதலை செய்யப்பட்டிருந்ததும் குறிப்பிடத்தக்கது.





