இலங்கை சிறைச்சாலையில் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்ட கைதி!
குளியாப்பிட்டிய சிறைச்சாலையில் இன்று (29) மதியம் கைதி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
சந்தேக நபர் தற்கொலைக்கு முயற்சித்ததாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தவுடன், அவரை மருத்துவமனையில் அனுமதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும் அவரை காப்பாற்ற முடியாமல்போனதாக காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.
இறந்தவர் அரேபொலவில் உள்ள சிரிபெல்ல பகுதியைச் சேர்ந்தவராவார்.
சந்தேக நபருக்கு எதிராக கொள்ளை தொடர்பான பல குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில் சந்தேக நபர் ஒரு கொள்ளை சம்பவம் தொடர்பாக அடையாள அணிவகுப்புக்கு ஆஜர்படுத்தப்பட இருந்த நிலையில் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டதாக காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.
அவரின் உடல் குளியாப்பிட்டிய போதனா மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளதுடன், நீதவான் விசாரணைகளை தொடர்ந்து பிரேத பரிசோதனை நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.





